Saturday, 24 December 2011

BEGGAR'S BEER

பிச்சைக்காரன் பீர்

'சுட்டகோழி சுடாத கோழி'யின் தொடர்பாக பிச்சைக்காரன் கோழி'யைப் பற்றியும் எழுதினேன்.
அதற்கும் ஒரு 'பலேபேஷ்' கிடைத்தபடியால் அந்த மடலுக்குத் துணை மடலாக 'போஜனக் கொறடா'வாக இந்த மடலை எழுதுகிறேன். 
பிச்சைக்காரர்கள் தங்களுக்கென்று பிரத்தியேக பானத்தையும் தயாரிப்பார்கள். 
இதற்குப் பயன்படுவது மரவள்ளிக்கிழங்கு. இந்தக் கிழங்கு மிகவும் அதிகமாகக் காணப்படுவது. அதுபாட்டுக்கு வளர்ந்து கிடக்கும். கீரைவகைகளிலேயே மிகவும் மலிவான கீரை குப்பைக் கீரையும் மரவள்ளிக்கீரையும் முருங்கைக்கீரையும்தான். 
மரவள்ளிக்கிழங்கை நன்றாக மசிய வேகவைத்து, தோலை உரித்து விட்டு, அதைப் பிசைந்து கொள்வார்கள்.
பயற்றமுளை என்றொரு காய்கறி வகை இருக்கிறது. பாசிப்பயறுக்கும் தட்டைப் பயிறுக்கும் இடைப்பட்ட பயறு ஒன்று இருக்கிறது. இதை மலேசியத் தமிழர்கள் பயற்றங்காய் என்பார்கள். இது இவர்களின் முக்கிய துணை வெஞ்சனமாக விளங்குவது. 
பயற்றமுளையின் கொஞ்சம் எடுத்து அதையும் சேர்த்து மரவள்ளிக் கிழங்கு மசியலுடன் சேர்த்துப் பிசைந்து கொள்வார்கள். 
இதை வெந்நீர் ஊற்றிக் கரைப்பார்கள். தேங்காய்த் தண்ணீர் சேர்ப்பார்கள்.
பானையில் இந்தக் கரைசலை வைத்து மூடி வைத்துவிடுவார்கள். 
இரண்டு ஆள் கழித்து அதை அப்படியே வடிகட்டி எடுத்துக் கொள்வார்கள். 
இது ஒருவகை பீயர். 
'பிச்சைக்காரன் பீயர்' என்று வேண்டுமானாலும் பெயர் கொடுக்கலாம்.
Homemade Brew.
"பிச்சைக்காரனுக்கு ஏது வீடு?" என்று கேட்கத் தோன்றும்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday, 27 November 2011

MAKKAR AND TAZZA MASALA


மக்கர், தாஸா மஸாலா         அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் உருது மொழிச் சொற்கள் பலவற்றைத் தமிழர்கள் பயன்படுத்திக்கொண்டிருந்தனர்.

அரசு சம்பந்தப்பட்டவை, சட்ட சம்பந்தப்பட்டவை, உடற்பயிற்சி, விளையாட்டு, போர் போன்ற துறைகளிலெல்லாம் அந்தச் சொற்களை அதிகம் பார்க்கமுடிந்தது. 
மக்கர், தாஸா மஸாலா என்ற சொற்களைப் பற்றி சொல்வதாக முன்பொரு தடவை எழுதியிருந்தேன்.
இவை இரண்டுமே உருதுச் சொற்கள். 
மக்கர் பண்ணுவது என்பது ஏதாவது ரிப்பேராகி விடுவது, அல்லது இடையூறு செய்வது போன்ற அர்த்தங்களில் வழங்கப்பட்டது. 
மதுரையில் ஒரு காலத்தில் ஜட்கா வண்டி ஓடிக்கொண்டிருந்தது. 
அது ஒரு ஒற்றைக் குதிரை பூட்டிய கூட்டு வண்டி. முன்னால் ஓட்டுநர் இருப்பார். 
ஒரு பிரம்பில் மாட்டிய சாட்டை, குதிரையின் லகான் இவை கண்ட்ரோலிங் மெக்கானிஸம். இன்னும் உண்டு. கைவிரல்களால் குதிரையின் வாலின் அடிப்பாகத்தைக் கிள்ளிவிடுவார். குதிரையின் கவட்டில் கால்பெருவிரலால் குத்துவார். இவற்றுடன் குதிரை பாஷையில் அதட்டிக்கொண்டிருப்பார். 
ஸ்டீயரிங், பிரேக், அக்ஸெலரேட்டர் எல்லாமே மேற்கூறிய இந்த சங்கதிகளால் நடப்பவைதாம். 
குதிரை பாஷை என்றால் ஏதோ குதிரை ஓட்டுனர் குதிரையிடம் விதம் விதமாகக் கனைப்பார் என்று நினைத்து விடக்கூடும். அப்படியெல்லாம் இல்லை. குதிரையை ஓட்டுபவர்கள் குதிரைகளுடன் பேசுவதற்கு ஒரு பிரத்தியேக பாஷை வைத்திருப்பார்கள். யானை மாவுத்தவர்கள் யானைகளுக்காக ஒரு பாஷை வைத்திருப்பதுபோல்தான். குதிரையின் கனைப்புகளை வைத்து குதிரை தன்னுடைய 
எஜமானனுடன் தொடர்பு கொள்ளும்.

குதிரையை ஓட்டுபவரை 'ராவுத்தர்' என்று குறிப்பிடுவார்கள். 
குதிரை ஒழுங்காக ஓடாமல் சண்டித்தனம் பண்ணுவதை "குதிரை மக்கர் செய்கிறது", என்பார்கள்.
களைத்துப்போன குதிரைக்கு சுதாரிப்பு ஏற்படுத்தி வேகமாக ஓடுவதற்கு ஒரு வித மருந்து வைத்திருந்தார்கள்.
அதற்குப் பெயர் தாஜா மசாலா - Taazza Masaala.
அதை வைத்து குதிரையைத் தாஜா பண்ணுகிறார்கள் அல்லவா? 
அதில் என்னென்ன சேரும் என்பது அவர்களுக்குத்தான் தெரியும். 
தாஸா மஸாலாவின் ரிஸிப்பி ஜட்கா வண்டிக்காரர்களுக்குள் மட்டுமே புழங்கி வந்தது. இப்போது ஜட்காவோ குதிரை வண்டிகளோ, சாரட்டு வண்டிகளோ இல்லாமற் போய்விட்டன. 
அப்படியே அந்தத் தாஸா மஸாலா ரிஸிப்பியும் மறைந்து போய்விட்டது.
ரேஸ் குதிரைகளுக்கு ரம் என்னும் மதுவைக் கொடுப்பது வழக்கம். 
இதுவும் ஒரு பழைய உத்திதான். 
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய பிரான்மலைப் பகுதியை பறம்புமலை என்று அழைத்தார்கள். அந்த மலை இருந்த நாடு பறம்பு நாடு எனப்பட்டது. 
அந்த நாட்டை ஒரு காலத்தில் பாரி வேள் ஆண்டுவந்தார். முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியைத்தான் சொல்கிறேன்.  
அவருடைய மிக நெருங்கிய நண்பர் கபிலர். மூன்றாம் தமிழ்ச் சங்கத்தின் முக்கிய புலவர்களில் ஒருவர். சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். 
பாரியின் குதிரை லாயத்தைப் பற்றி அவருடைய பாடல் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். 
பாரியின் குதிரைகளுக்குக் குடிக்கக் கொடுத்த மது சிந்தியதால் குதிரை லாயமே சகதியாக விளங்கியதாகப் பாடியுள்ளார்.
பாடலைத் தேடிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, 18 November 2011

WHY SO...

ஏன் இப்படி?

        பல சமயங்களில் யோசனை செய்ததுண்டு.
உடற்பயிற்சி, மல்யுத்தம் போன்றவை சம்பந்தமான வழக்கில் 
உள்ள சொற்கள், உருதுவில் இருக்கின்றன. உடற்பயிற்சியில் 
பயன்படும் கருவிகளின் பெயர்கள்கூட உருதுச்சொற்களாக இருக்கின்றன.


குஸ்தி, 
காட்டா குஸ்தி, 
லடாய், 
பயில்வான், 
வஸ்தாது, 
மஸ்து, 
கட்டுமஸ்து, 
லங்கோடு, 
மோட்டா, 
லண்டி, 
கோதா, 
தண்டால், 
பஸ்கி, 
பல்டி, 
அந்தர்பல்டி, 
கஸரத், 
ஜக்கரித்தல், 
ஜகா வாங்குதல், 
சலாம், 
வரிசை, 
கவாத்து.....
கர்லாக்கட்டை


இப்போது ஞாபகத்துக்கு வந்தவை இவைதான். 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday, 5 October 2011

PEPPER VALUE

மிளகின் மதிப்பு
சில பழைய தமிழ் வரலாற்றுப் புத்தகங்களில் அவற்றின் ஆசிரியர்கள் சில வெளிநாட்டு ஆட்களின் பெயர்களைத் தமிழில் எழுதியிருப்பார்கள்.
ஒரு நூலில் பார்த்தேன்.... கொசுமசு என்று இருந்தது. Cosmas என்பதுதான் இப்படியாகியிருக்கிறது. Hippocrates என்னும் பெயர் கிப்போக்கிரிட்டசு என்று காணப்படுகிறது.
இன்னொரு நூலில் - Herodotus என்பதை கெரத்தோத்தசு என்று ஆசிரியர் எழுதியுள்ளார். Tiberius தைபேரியசு ஆகியிருக்கிறது.
கிப்போக்கிரிட்டசு என்றதும் ஞாபகத்துக்கு வருகிறது. அவர் இருந்த காலத்தில் சேரநாட்டிலிருந்து ரோம் பேரரசுக்கு ஏராளமாக மிளகு கொண்டுசெல்லப்பட்டது.
ஒரு கீலோ மிளகு அங்கு முப்பத்தாறு வெள்ளி டெனாரியஸ்-Denarius நாணயத்துக்கு விற்கப்பட்டது. இது பிளினி - Pliny சொன்னது.
தமிழகத்தில் குறைந்த விலைக்கு வாங்கி, ரோமாவில் அவ்வளவு விலைக்கு விற்றார்கள்.
ஒரு டெனாரியஸ் நான்கு கிராம் எடையுள்ளது. 
இன்றைய மதிப்பு மூன்றுஞ்சில்லறை யூஎஸ் டாலர்.
அப்படியானால் ஒரு கீலோ மிளகின் விலை இன்றைய மதிப்புக்கு நூற்றுப் பத்து யூஎஸ் டாலர் ஆகிறது.
இந்த வெள்ளி டெனாரியஸ் நாணயத்துக்கு ஒரு தரநிர்ணயம் இருந்தது. அதாவது Standard என்பார்கள். 
சந்தையில் ஒரு டெனாரியஸ் என்பது பத்து கழுதைகளுக்கு சமம். அதாவது ஒரு டெனாரியஸால் பத்து கழுதைகளை வாங்கமுடியும். 
அதனால்தான் அதற்கு டெனாரியஸ் என்று பெயர் ஏற்பட்டது. டெனா - பத்து.
தமிழகத்துடன் மிக மிக விறுவிறுப்பாக வர்த்தகம் செய்துகொண்டிருந்த காலத்தில் ஒரு டெனாரியஸ் பதினாறு கழுதைகளை வாங்கக்கூடியதாக இருந்தது.
ஆரம்பத்தில் நாணய மதிப்பை நிர்ணயிப்பதற்குப் பசுக்களைத்தான் வைத்திருந்தார்கள். 
Pecunia என்பது இலத்தீனில் பணத்தைக் குறிக்கும். 
Pecuniary matters என்ற ஆங்கில சொற்றொடர் இதிலிருந்து வந்ததுதான். 
Pecu என்பது இலத்தீனில் பசுவைக் குறிக்கும்.
ராஜஸ்தானிலிருந்து ஸ்வீடனுக்கு ஆரியர்கள் சென்றபோது இந்த சொற்களையெல்லாம் எடுத்துச் சென்றார்கள் என்று தற்கால இண்டிக் ஹிந்துத்வா ஆட்கள் சொல்லக்கூடும்.
இது இப்பிடியா, அது அப்பிடியா என்பது நம்ம ஆட்கள் எந்தப் பக்கம் சார்ந்திருக்கிறார்கள் என்பதைப் பொருத்தது. 
கலி·போர்னியா பாடப்புத்தகம் மாதிரி.

###############################

Monday, 26 September 2011


சப்த சமுத்ராதிபதி-#1

சீனா பல நூற்றாண்டுகளாகக் கடலோடும் கலையை நன்கு கற்றிருந்தனர்.
அவர்கள்தான் காந்தத்தைப் பயன்படுத்தி திசையறியும் கலையை முதன்முதலில் கண்டறிந்தவர்கள் என்பார்கள். 
மற்றவர்களிடமும் இருந்ததா என்பதற்கு சான்றுகள் தற்சமயம் இல்லை. 

மலாய் இனத்தவர் தென்கிழக்காசியா முழுவதிலும் பரவி இருக்கின்றனர். 
ஆ·ப்ரிக்காவின் கிழக்கில் இருக்கும் மடகாஸ்கார் தீவிலும் அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே குடியேறிவிட்டனர். 
இந்தோனீசியர்கள் தங்களின் பெருங்கப்பல்களில் ஆ·ப்ரிக்காவின் தென்முனையையும் கடந்து மேற்கில் உள்ள கானா நாட்டிற்குச் சென்றதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
பஸி·பிக் மாக்கடலில் உள்ள மிகச் சிறிய தீவுகளில்கூட பாலினீஸியர்கள் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள்.

விஜயநகரப் போரரசில் ஒரு பெரிய கடற்படைத் தளபதி இருந்தார். 
பெயர் லக்கண்ண உடையார். இவரும் இவருடைய அண்ணனாகிய மாதண்ண உடையாரும் ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் பெரும்பகுதியைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தனர். 
இவ்வளவுக்கும் அவர்கள் விஜயநகரின் உயர் அதிகாரிகள்தாம். De Facto Rulers என்று இப்போது சொல்கிறோமல்லவா?
இவர்களில் லக்கண்ண உடையாருக்கு 'சத்த சமுத்திராதிபதி' என்னும் சிறப்புப் பெயர் உண்டு. 
லக்ஷ்மணன் என்னும் வடமொழிப் பெயர் தமிழில் இலக்குவன் என்று மாறியதைப் போலவே கன்னடத்தில் லக்கண்ணா என்று மாறியிருக்கிறது. 
இதைப் பற்றி நான் பள்ளிமாணவனாக இருந்தபோது என்னுடைய ஆசிரியர் ஒருவர் சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது. அதை அப்புறம் சொல்கிறேன். 

லக்கண்ண உடையாருக்குச் சத்த சமுத்திராதிபதி - ஏழு கடல்களுக்கும் முழுமுதற் தலைவன் - என்று பட்டப்பெயர் இருந்ததுபோல் இன்னொருவருக்கும் இருந்தது.
அவர் ஒரு சீனர்.
பெயர் செங் ஹோ. 
அட்மிரல் செங் ஹோ என்று அவருடைய பதவியையும் சேர்த்தே சொல்லிச்  சொல்லி, அப்படிச் சொன்னால்தான் 'அவர்தான்' என்று அறிந்து கொள்ள முடியும் என்பதுபோல் அந்த 'அட்மிரல்' பட்டம் ஒட்டிக் கொண்டு விட்டது. 
செங் ஹோவின் அசல் பெயர் மா ஸின் பா.

சீனாவின் மிங் சக்கரவர்த்தியாகிய யோங் லோ சக்கரவர்த்தி மிகப் பெரிய கடற்படையை நிர்மாணித்து, அதைக் கொண்டு உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று சீனாவின் மேலாண்மையைப் பிரகடனப் படுத்தி வரவேண்டும் என்று ஆணையிட்டார். 

அதுவரை உலகம் காணாத பெரும் பெரும் கப்பல்களைக் கட்டி, இருபத்து ஏழாயிரம் பேர் மாலுமிகள், வேலையாட்கள், அதிகாரிகள், போராளிகள் ஆகியோரைக் கொண்டு செங் ஹோ கட்டளையை நிறைவேற்றினார். 
செங் ஹோவுக்கு 'Lord Of The Seven Seas' - சப்த சமுத்ராதிபதி என்ற சிறப்புப் பட்டம் உண்டு. 
செங் ஹோவும் லக்கண்ண உடையாரும் கிட்டத்தட்ட சம காலத்தவர்கள்.

மொத்தம் ஏழு பயணங்களை அவரே நேரடியாகக்  கடற்படைக்குத் தலைமை தாங்கி மேற்கொண்டார். 

ஏழாவது  பயணத்தின்போது அவர் நாகைப் பட்டனத்துக்கு அருகில் கப்பலிலேயே இறந்து போனார். 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday, 18 September 2011

SMOKE CART AND SMOKE PICTURE

புகைவண்டியும் புகைப்படமும்           Train என்னும் ஊர்தியை புகை வண்டி என்று தமிழில் எழுத ஆரம்பித்தார்கள். அப்போதெல்லாம் புகையையும் நீராவியையும் குப் குப் என்று விட்டுக்கொண்டே சென்றது. சிக்கு புக்கு என்றாலே ட்ரெய்ன் வண்டியைக் குறிக்கக்கூடிய அளவிற்கு அது பரிச்சயமாகிவிட்டது.
ஆனால் இப்போதெல்லாம் ட்ரெய்ன் வண்டி புகையை விட்டுக்கொண்டு செல்வதில்லை. எஞ்சினெல்லாம் இப்போது டீசலில் ஓடுகிறது. அல்லது மின்சாரத்தில் ஓடுகிறது. காந்த சக்தியால் ஓடும் ட்ரெய்ன்களும் இருக்கின்றன.
ஆனாலும் ட்ரெய்னைப் புகைவண்டி என்று சொல்லவில்லையென்றால் சில தமிழ்ப் பற்றாளர்களுக்குக் கோபம் வந்துவிடுக்கிறது.
ரயில் வண்டி என்ற சொல்லும் அதிகமாக வழக்கில் இருந்தது. ஆனால் அதையும் தூய தமிழ்ச் சொல் இல்லையென்று ஒதுக்குவார்கள்.
Rail என்னும் தண்டவாளங்களில் செல்வதால்தான் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அதை ரயில் வண்டி சொல்லலானார்கள். அது இன்றளவுக்கும் புழக்கத்தில் இருந்து வருகிறது. Railways என்ற சொல்லும் பிடித்தபிடியாக இன்னும் இருந்து வருகிறது.
        மலேசியாவில் தண்டவாளத்தைக் 'கம்பிச் சடக்கு' என்று சொல்வார்கள். 'சடக்கு' என்றால் தெரு, வீதி.

Photograph என்பதையும் புகைப் படம் என்று சொல்கிறார்கள். புகைக்கும் அந்தப் படத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.
சிலர் நிழற்படம் என்றும் சொல்கிறார்கள். நிழலுக்கு உரிய அர்த்தத்துக்கும் கேமராவின் உட்புறத்தில் விழும் Image-ஜுக்கும் வித்தியாசமுண்டு. அது நிழலல்ல. பிரதிபிம்பம், பிரதிபலிப்பு என்பதுகூட Reflection என்பதைத்தான் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் டிஜிட்டல் சமாச்சாரங்கள் என்றால் அவை எங்கேயோ போய்விட்டன.
இவற்றையெல்லாம் Update செய்யவேண்டுமோ?


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$Monday, 5 September 2011

OLD TITLES

 பழைய பட்டங்கள்.......

சில ஆண்டுகளுக்கு முன்னர் கேட்கப்பட்டதொரு கேள்வி - பழைய கதை ஒன்றில் வரும் பாத்திரமாகிய 'ராவ்சாகிப் பொன்னம்பலம் பிள்ளை' என்னும் பெயரில் உள்ள ராவ்சாகிபைப் பற்றியது.
'ராவ் சாகிப்' என்பதை எதை குறிக்கிறது?' என்பதே கேள்வியின் சாரம்.

ராவ்சாகிப் என்பது ஒரு விருது.
ராவ்பகதூர் என்ற விருதும் இருந்தது.
திவான் பகதூர் என்பது இன்னொரு விருது.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆளும்போது தம்முடைய அரசுக்கு விசுவாசமாக இருக்கும் பெரிய மனிதர்களுக்குக் கொடுத்த பட்டம்.
எழுபது எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கதைகளில் வரும் பல சொற்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவற்றில் உள்ள பல சொற்கள் இப்போது வழக்கிழந்து போயின.
அந்த மாதிரி நூல்களைப் படிக்கவேண்டுமென்றால் யாராவது பழைய ஆட்கள் இருந்தால் அவர்களிடம் கேட்கவேண்டிவரும்.
அந்த மாதிரி புத்தகங்களை ரீப்ரிண்ட் போடும்போது இந்த மாதிரி சொற்களுக்கு ஒரு க்லாஸரி போட்டு, வைத்தால் மிகவும் பயனாக இருக்கும்.
மிட்டாதார், மிராசுதார், ஜமீன்தார், சுவான்தார், சிரேஷ்ததார், பட்டா மணியம், முன்சீபு, கர்ணம், தலையாரி, கொத்தவால், சர்க்கீல், திவான்,
தளவாய், பிரதானி, வஸீர், தர்வான், தானாபதி போன்ற பல சொற்கள் அப்படிப் பட்டவை.
கட்டபொம்மன் கதையில் தானாபதி சுப்பிரமணிய பிள்ளை என்பவர் வருவார். பல இடங்களில் அவர் தானாபதியா பிள்ளை என்று குறிப்பிடப் பட்டிருப்பார்.
நாயக்கர் வரலாற்றில் தளவாய் அரியநாத முதலியார் என்பவர் வருவார். அவருடைய வழித்தோன்றல்கள் 'தளவாய் முதலியார்' என்னும் ஒரு தனி கிளைச் சாதியை உருவாக்கிக் கொண்டுவிட்டனர். ரசிகமணி டீகேசி என்னும் டீகே சிதம்பரநாத முதலியார் அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்தான்.
கட்டபொம்மனைப் பிடித்தவர் சர்தார் முத்துவைரவ அம்பலம் என்பவர். அவர் புதுக்கோட்டைப் படைகளின் தலைவராக இருந்தார்.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் சேஷையா சாஸ்திரிகள் திவானாக இருந்தார். அவர்தான் இன்றைய புதுக்கோட்டை மீண்டும் உருவாக்கினார். அங்கிருக்கும் புதுக்குளத்தையும் ஏற்படுத்தினார்.
தானாபதி என்பவர் யார், தளவாய் என்பவர் யார், சர்தார் யார் என்பது தெரியாமலேயே கதையையோ வரலாற்றையோ படித்துக்கொண்டே போக நேரிடும்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Wednesday, 31 August 2011

THUS IT IS....
கழுதை தேய்ந்து........       'ஆசியாவிலேயே மிகப் பழைமையான'  என்ற சில பெருமைமிக்க விஷயங்கள் கொண்டது சென்னை மாநகர். அவற்றில் ஒன்று சென்னை மியூசியம். நூற்றைம்பது ஆண்டுகளுக்கும் முற்பட்டது அந்த மியூசியம். 


எனக்கு எட்டு வயதிருக்கும்போது - ஐம்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் முதன்முதலாக அங்கு சென்றேன். அழைத்து செல்லும்போது 'செத்த காலேஜு'க்குக் கூட்டிச் செல்வதாகச் சொன்னார்கள். அன்று இன்னொரு இடத்துக்கும் சென்றோம். அது 'உயிர்க் காலேஜு'. அதான் மிருகக்காட்சி சாலை. 


மியூசியத்தில் நான் பார்த்தவற்றில் கவனத்தில் இருந்தது ஒரு திமிங்கலத்தின் எலும்புக்கூடு. மேல் சீலிங்கிலிருந்து கம்பிகளின்மூலம் தொங்கிக்கொண்டிருந்தது.                      


அதன் பின்னர் 1972-இல் கடைசியாக ஒரு முறை சென்றேன். அதுவும் 'இந்தா அந்தா' என்று முப்பது ஆண்டுகளாகிவிட்டதே! 
அப்போதும், பாவம் அந்த திமிங்கலம், எலும்புக்கூடாகத் தொங்கிக் கொண்டிருந்தது.
புராணக்கதைகளில் வருமே வேதாளம் - தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்குமாம். அது போலவே அந்த திமிங்கலக் கூடும். பாவம். என்ன சாபமோ? யார் கொடுத்த சாபமோ? 
இன்னும் தொங்குகிறதா என்பது தெரியவில்லை. மெட்ராஸ் வாலாக்கள்தாம் சொல்ல வேண்டும்.


இந்த 'செத்த காலேஜை' முதன்முதலில் ஜியாலஜி சம்பந்தப்பட்ட காட்சியகமாகத்தான் ஆரம்பித்தார்கள் போல் நினைவு. அதன் பிறகு மிருகங்களின் பாடம் செய்யப்பட்ட உடல்களையும் எலும்புக் கூடுககளையும் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் 'செத்த காலேஜு' என்ற பெயர் ஏற்பட்டது. பழஞ்சிலைகள், அரும்பொருட்கள் போன்றவற்றை வைத்தும்கூட அந்தப் பெயர் ஒட்டிக்கொண்டுவிட்டது.


அது பெற்ற பெயருக்கும் அது கொண்ட பழைமைக்கும் ஏற்ற அளவுக்குப் பழம் பொருட்கள், அரிய பொருட்கள் கிடையாது. அதுவும் கண்ட கண்ட இடத்திலெல்லாம் பழஞ்சிலைகளின் மீது தடுக்கி இடறி விழும் தமிழகத்தின் மியூசியத்தில் அரும்பொருள்கள் இத்தனை குறைவாக இருக்கின்றன என்பது வயிற்றெரிச்சலான விஷயம்தான். அந்த மியூசியத்தில் காணுவதற்கு அரிதாக இருக்கக்கூடியதெல்லாம் அரும்பொருள்கள்தாம்.


நான் கடைசியாகச் சென்றபோது நான் பார்த்த காட்சி இன்னும் பசுமையாகவும் ஒரு வகையில் வேடிக்கையாகவும் இருக்கிறது. 
Incongruous என்று சொல்வார்களே...அதுவும் பல சமயங்களில் வேடிக்கையான விஷயமாகத்தான் இருக்கும்.
நான் பார்த்த காட்சியும் மியூசியத்தின் சூழலில் incongrous-ஆகத்தான் இருந்தது.


அப்போதெல்லாம் உபரியாகக் கிடைத்த நாணயங்களை ஒரு குறிப்பிட்ட விலைக்கு விற்பார்கள். அவ்வாறு வாங்கப்பட்டவை என்று ஒரு சர்ட்டி·பிக்கேட்டும் கொடுப்பார்கள். 


ஆர்க்காட்டு ரூபாய்கள் அப்போது விற்கப்பட்டன. 


'ஆர்க்காட்டு ரூபாய்' என்பது முகலாய பாதுஷா ஔரங்கசீபின் மகன் பேரன் ஆகியோர் காலத்தில் வெளியிடப்பட்ட - ஷா ஆலம், ஆலம் கீர் ஆகியோர் பெயரால் வெளியிடப்பட்ட வெள்ளி ரூபாய். 
அதில் பழைமையான ரூபாய், ஐந்து மில்லிமீட்டர் கனமும் ஐந்து-ஆறு செண்டிமீட்டர் குறுக்களவும் கொண்டது. இந்த ரூபாயை முகலாயர்களின் கீழிருந்த ஹைதராபாத் நிஜாமும் அவனுக்குக் கீழிருந்த ஆர்க்காட்டு நவாபும் அவர்களின் பிரதிநிதிகளாக விளங்கிய கிழக்கிந்தியக் கும்பினியாரும் கரன்சியாகப் பயன்படுத்தினர். 
தமிழகம் ஆர்க்காட்டு நவாபின் ஆட்சிக்குக் கீழ் வந்தபின்னர் இந்த ரூபாயை அதிகார பூர்வமான கரன்சியாக எல்லாரும் ஏற்றுக்கொண்டனர்.


சிவகங்கைச்சீமையை ஆண்ட மருது சேர்வைக்காரர்களில் மூத்தவரான பெரிய மருது சேர்வைக்காரர் ஆர்க்காட்டு ரூபாயை ஒரே கையின் ஆள்காட்டி விரல், நடுவிரல் ஆகியவற்றின் மீது வைத்துக்கொண்டு பெருவிரலினால் அழுத்தி வளைத்துவிடுவாராம்.  


ஆனால் பிற்காலத்தில் அந்த ரூபாயின் ஓரத்தை அராவிவிட்டு அந்த ரூபாயைச் சிறியதாக ஆக்கிவிட்டார்கள். 


இந்த மாதிரியான ஆர்க்காட்டு ரூபாய்கள் சென்னை மியூசியத்தில் முப்பதாண்டுகளுக்கு முன்னர் விற்பனைக்குக் கிடைத்தன.  


நானும் வாங்குவதற்காகச் சென்றேன். 


அப்போது அந்த நாணயங்கள் நூமிஸ்மேட்டிக்ஸ்  க்யூரேட்டர் ஒருவரின் பொறுப்பில் இருந்தன. 


நான் சென்றபோது அவர் சீரியஸாக ஒரு பெரிய காரியத்தை மும்முரமாகச் செய்துகொண்டிருந்தார். 


ஒரு தோல் விரிப்பை மடியில் போட்டுக்கொண்டு ஒரு ஆர்க்காட்டு ரூபாயை எடுத்து வைத்துக்கொண்டு அவர் பாட்டுக்கு அராவிக் கொண்டிருந்தார். 


ஏற்கனவே அராவப்பட்ட சங்கதியாயிற்றே. பாட்டோடு பாடாக அவர் பங்குக்குக் கொஞ்சம் அராவிக்கொண்டிருந்தார். ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கொஞ்சம்....யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்.


எனக்கு ஒரு ரூபாயை வாங்கிக்கொண்டு வந்துவிட்டேன்.


ஆனால் அன்று கண்ட காட்சி அப்படியே மனதில் நின்றுகொண்டது. 


'இது இங்கே இப்படித்தான் இருக்கும் - Take it or Leave it'. 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, 26 August 2011

WHY CONCEAL?

மறைப்பதன் காரணம்....?


மடற்குழுவிலோ ப்லாகிலோ ·பேஸ்புக்கிலோ எழுதும்போது பல விஷயங்களை முழுமையாகச் சொல்லமுடிவதில்லை. சொல்ல வந்த விஷயங்களைப் பூர்த்தியாக்காமலேயே விடவேண்டியுள்ளது. ஆகவே பல கட்டுரைகள் பூர்த்தியாகாமல் நிற்கும்.
கட்டுரைகளைப் பூர்த்தி செய்யமுடியாமைக்கும் சில காரணங்கள் இருக்கின்றன.
சில விஷயங்களை மறைக்கவேண்டியது மிக அவசியமாகிறது.
ஓர் ஊரில் ஓரிடத்தில் ஒரு மண்டபம். அதில் உள்ள தூண்களில் பெரு விரல் பரிமாணமே கொண்ட சிறு சிறு Miniature தூண்களைச் செதுக்கி யுள்ளார்கள்.
அந்தக் குட்டி தூண்களைச் சுற்றி விரலை விட்டுத் துழாவமுடியும். அதிலும் பல பூவேலைப்பாடுகள் இருக்கும்.
Xylophone என்னும் இசைக்கருவி ஒன்று இருக்கிறது.
அதில் இரும்புக் கலவை, வெண்கலம் போன்றவற்றால் செய்த குழாய்கள், பட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும். தட்டினால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு  Note-ஐ ஒலிக்கும். அது ஒரு இசைக்கருவி. ஜலதரங்கம், பியானோ ஆகியவற்றின் அடிப்படையைக் கொண்டது.
இதே மாதிரியாகக் கல்லிலேயே வடித்திருக்கிறார்கள். தட்டினால் வெவ்வேறு ஸ்வரங்களில் ஒலிக்கும். வெவ்வேறு இசைக்கருவிகள் போன்றும் சில குட்டித்தூண்கள் ஒலிக்கும்.
பார்ப்பதற்கு இந்த சூட்சுமம் புரியாது.


அந்த மண்டபத்தைப் பற்றி விரிவாக எழுதினால் என்ன ஆகும்?


காஞ்சி வரதராசப்பெருமாள் கோயிலில் ஓரிடம் இருக்கிறது. அங்கு கூரையின் விதானத்தில் பல்லி ஜோடியை வடித்துள்ளார்கள். அவற்றிற்கு மேல் பொன்னாலும் வெள்ளியாலும் தகடுகள் செய்து போர்த்திருக்கிறார்கள். இவற்றின் நேர்கீழே ஏணி இருக்கிறது. அருகில் ஓர் ஆசாமி மேஜை நாற்காலி போட்டுக்கொண்டு உட்கார்ந்துகொண்டு டிக்கெட் விற்றுக்கொண்டிருப்பார். டிக்கெட் வாங்கிக்கொண்ட பின்னர் அந்த ஏணியின் மீது ஏறி, அந்தப் பல்லிகளைத் தடவிக் கொடுக்கலாம். அந்த மாதிரி பல்லிகளைத் தடவினால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று நம்புகிறார்கள். 'பார்ப்பதற்கு வசூல், தொடுவதற்கு  வசூல்' என்று சுரண்டிக் கொண்டிருப்பார்கள்.
அந்த மண்டபத்தின் இருப்பிடத்தையும் அதன் விசேஷத் தன்மையையும் வெளியிட்டால் என்ன ஆகும்?
போகிறவர் வருகிறவரெல்லாம் தட்டித் தட்டித் தட்டி....... பாவம்..... பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்ட பெரும் மன்னர்களின் அரிய சிருஷ்டி ஒரே தலைமுறையில் - சில ஆண்டுகளில் வீணாகிவிடும்.
அல்லது ஏதாவது மராமத்துச் செய்கிறேன் என்று காரணம் காட்டி அந்த மண்டபத்தையே பிரித்து அக்குச் சுக்காக்கிக் காசாக்கி விடுவார்கள்.
புதிய அரிய விஷயத்தை வெளியிட்டால், அது உடனடியாகத் திருடப் படுகிறது. வேறு பெயர்களில் வெளியாகிவிடுகிறது. சில ஆய்வுகளுக்கு அவை அப்படியே Lock, Stock, and Barrel-ஆக எடுக்கப்படுகின்றன. ஆனால் யாருடைய Intellectual Property என்பது மதிக்கப் படுவதில்லை.
ஆகையால்தான் பல விஷயங்களை வெளியிடுவதற்கில்லை.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Friday, 12 August 2011

KAISAR I HIND


கைஸர் இ ஹிந்த்உலக வரலாற்றில் பிரசித்தி பெற்றவர் ஜூலியஸ் ஸீஸர்.
ரோம சாம்ராஜ்யம் என்பது கிமு. 600- இல் ஏழு குன்றுகளின்மீதிருந்த ஒரு ஊரை மையமாக வைத்து ஏற்பட்ட சாம்ராஜ்யம்.
பல போர்களின்மூலம் விரிவடைந்து கிமு 55 -இல் மேற்கே பிரிட்டன் தீவிலிருந்து தென் ஐரோப்பா முழுவது, வட ஆ·ப்ரிக்கா, துருக்கி, சீரியா பாலஸ்தீனம், ஈராக் ஆகிய பகுதிகள் கொண்ட மிகப் பெரும் சாம்ராஜ்யமாக விளங்கியது.
கிமு 70 இலிருந்து அதன் சக்கரவர்த்தியை ஸீஸர் என்று குறிப்பிடுவது வழக்கமாயிற்று.
ஸீஸர் -Caesar என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பத்த்னரின் குடிப்பெயர்.
அந்த குடியைச் சேர்ந்தவர்தான் ஜூலியஸ் ஸீஸர். ஸீஸர் என்பது ஜூலியஸின் குடும்பப் பெயர்.
ஜூலியஸ் ஸீஸரை ரோமச் சக்கரவர்த்தியாக ஆக்குவதற்கு அவருடைய நண்பராகிய மார்க்கஸ் அந்த்தோனியஸ் போன்றவர்கள் பெரிதும் முயன்றனர்.
ஆனால் ஜூலியஸ் ஒரு சர்வாதிகாரியாக மட்டுமே விளங்குவதில் திருப்தி கண்டார்.
உண்மையிலேயே அந்தச் சொல் ஸீஸர் என்று உச்சரிக்கப்படக்கூடாது.
அது ஆங்கில வழக்கு.
மூலமொழியாகிய லத்தீனில் அது 'கைஸார்'.
அவருடைய மரணத்துக்குப் பின்னர் அவருடைய அண்ணன் மகனாகிய அக்டேவியனும் மார்க்கஸ் அந்தோனியஸ¤ம் அதிகாரத்துக்கு வந்தனர். அதன்பின்னர் அவர்களுக்குள் நடந்த போரில் அந்தோனியஸ் இறந்தபிறகு அக்டேவியனே தலைமைத்துவத்துக்கு வந்தார்.
அப்போது அவர் அகஸ்டஸ் ஸீஸர் என்ற பெயருடன் பேரரசர் ஆனார். அந்த கால கட்டத்தில் அந்தப் பதவியை ப்ரின்கெப்ஸ் Princeps என்று அழைத்தனர்.
ஆனால் ஸீஸர் என்ற குடும்பப்பெயர் நாளடைவில் பதவியைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. ப்ரின்கெப்ஸ் என்னும் சொல், வழக்கிலிருந்து மறைந்தது.
நீரோ ஸீஸருக்குப் பின்னர் அகஸ்டஸின் குடும்பத்தினரிடமிருந்து ப்ரின்கெப்ஸ் பதவி கைமாறிவிட்டது. வேறு ஆட்கள் பதவிக்கு வந்தார்கள். இருப்பினும் அவர்களையும் ஸீஸர் என்றே குறிப்பிட்டனர்.


பிற்காலத்தில் ஜெர்மன் சக்கரவர்த்தியின் பதவியின் பெயரும் ரஷ்யச் சக்கரவர்த்தியின் பதவிப் பெயரும் ஸீஸர் என்னும் சொல்லிலிருந்து தோன்றிய கைஸர், க்ஸார் என்று வழங்கப்பட்டன.
ஜூலியஸ் ஸீஸரின் தாயின் வயிற்றைக் கீறி அவரை வெளியில் எடுத்தார்களாம். ஆகவே அந்த அறுவை முறையை ஸீஸரியன் என்று அழைக்கலாயினர்.
ஸீஸரியன் என்பது 'ஸீஸர் சம்பந்தமானது' என்று பொருள்படும்.
சமஸ்கிருதத்தில் குரு வம்சத்தினன் கௌரவ என்றும் துருபதன் மகள் த்ரௌபதி என்றும் ஜபலா மகன் ஜாபாலி என்பதுபோல.
ஜூலியஸ் ஸீஸருக்குக் க்லியோபாட்ரா மூலம் ஒரு மகன் இருந்தான்.
அவனுடைய பெயர் என்னவென்று தெரியாது. ஆனால் அவனை ஸிஸாரியன் என்று அழைத்தனர்.


"பிற்காலத்தில் ஜெர்மன் சக்கரவர்த்தியின் பதவியின் பெயரும் ரஷ்யச் சக்கரவர்த்தியின் பதவிப் பெயரும் ஸீஸர் என்னும் சொல்லிலிருந்து தோன்றிய கைஸர், க்ஸார் என்று வழங்கப் பட்டன." என்று எழுதியிருக்கிறேன்.


உருது மொழியிலும் கைஸர் என்னும் சொல் வழங்கியது.
கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி நிர்வாகத்தில் இந்தியா ஒரு காலத்தில் இருந்தது.
விக்டோரியா ராணி காலத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியைக் கலைத்துவிட்டு பிரிட்டிஷ் அரசின் கீழ் நேரடியாகக் கொண்டுவந்தனர்.
அப்போது இந்தியாவில் நேரடியாக ஆளப்பட்ட பிரதேசங்கள் தவிர சுதேசி மன்னர்கள் ஆட்சியில் இருந்த சமஸ்தானங்களும் இருந்தன.
ஆகவே இந்தியாவைத் தனி சாம்ராஜ்யமாக ஏற்படுத்தி, அதன் சக்கரவர்த்தினியாக விக்டோரியா ராணியைப் பிரகடனப்படுத்தினார்கள்.
இந்தியாவின் சக்கரவர்த்தினி என்னும் பொருல்படும் 'கைஸர் இ ஹிந்த்' - 'Kaisar i Hind' என்னும் சிறப்புப் பட்டத்தைக் கொடுத்தார்கள்.
கைஸர் இ ஹிந்த் என்னும் பெயரில் ஓர் உயர்ந்த விருது ஏற்படுத்தப் பட்டது.
அது அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர்களில் ஒருவர் - மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி.


அவருக்குப் பின்னர் அவருடைய மகனாகிய ஏழாம் எட்வர்டு மன்னர் எனப்படும் மொட்டைத்தலை ராசா ஆட்சிக்கு வந்தார்.
அவருடைய விருதுப் பெயர்களில் ஒன்று- 'Kaisar-e-Hind'.
Emperor Of India.
இந்தியாவின் சக்கரவர்த்தி.
அவருடைய பேரர் ஆறாம் ஜார்ஜ் வரைக்கும் இந்தப் பட்டம் நீடித்தது.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday, 7 August 2011

An Ancient Tamil Custom


சாவா மூவாப் பேராடு


தமிழ்க்கல்வெட்டுக்களில் ஒரு சொற்றொடரைக் காணலாம். 
'சாவா மூவா பேராடு' என்று காணப்படும். 
கோயில்களில் நிறுவப்படும் திருப்பணிகளில் திருநுந்தா விளக்குத் திருப்பணி முக்கியமானது. 


திருநுந்தா விளக்கைத்தான் இப்போது 'தூங்காமாணி விளக்கு' என்றும் 'தூண்டாமணி விளக்கு' என்றும் சொல்கிறோம். 
நுந்துதல் என்றால் தள்ளிவிடுதல் என்று பொருள். திரியைத் தள்ளி விடாமல் - நுந்தி விடாமல் இருப்பதால் நுந்தாவிளக்கு. இந்த வகை விளக்கு இடைவிடாமல் எப்போதும் எரிந்து கொண்டேயிருக்கும். அந்த விளக்கின் மேற்புறத்தில் ஒரு கவிழ்த்துவைத்த கலசம்போல் காணப்படும். அது reservoir. அதில்தான் நெய் ஊற்றி நிரப்பப்பட்டிருக்கும். அந்தக் கலசத்திலிருந்து நெய், அதன் அடியில் உள்ள சிறு விளக்குக்கு வரும். அதில் ஒரு சிறிய திரி இருக்கும். அந்தத் திரியை ஏற்றிவைத்திருப்பார்கள். அந்த விளக்கை அணைய விடுவதில்லை. 


திருநுந்தாவிளக்குக்கு நெய் நிறையத் தேவைப்படும். ஆகவே அதற்கு நெய் தினப்படி கிடைப்பதற்காக நிவந்தமாக மாடு அல்லது மாடுகள் கொடுப்பார்கள். இந்த மாடு கறவை மாடாக இருக்கவேண்டும்.

மாடு கிழண்டு போனாலோ, இறந்து போனாலோ அல்லது பால் வற்றிப் போனாலோ வேறொரு பசு கொடுக்கப்படும். இது ஒரு never-ending-chain போல விளங்கும். இதற்காகக் கணிசமான பொருளோ, பொற்காசுகளோ, அல்லது நிலமோ கோயிலுக்குக் கொடுப்பார்கள். அந்த மாட்டின் பராமரிப்பு போக்குவரத்து இத்யாதி விஷயங்களுக்காக.


இவ்வாறு கொடையில் தடுமாற்றமில்லாது கொடுக்கப்படும் மாடுகளை 'சாவா மூவாப் பேராடு' என்று குறிப்பிடுவார்கள். 
பேராடு என்று குறிப்பிடப்படுவது மாடு. இப்போதும்கூட மாட்டைப் பெரிய ஆடு என்று சொல்லும் வழக்கம் தமிழ் முஸ்லிம்களிடையே இருக்கிறது.


அதாவது அந்த நிவந்தத்தில் சம்பந்தப்பட்ட மாடு சாகவும் மாட்டாது, மூப்பாகவும் மாட்டாது என்பது அடிப்படையான் விஷயம். அதுதான் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே - Replacement பண்ணப்பட்டுக் கொண்டே யிருக்கிறதே. 


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday, 17 July 2011

TIME AND TIDE

அகத்தியர் குழுவில் 18/07/11-இல் நான் எழுதியது - 

காலமும் கடற்பெருக்கும் - #1

நேற்று நீண்டநாட்களாகப் போட்ட திட்டங்கள் மூன்று நிறைவேற்றப்படமுடியாமற் போய்விட்டன.
நான்கு குறும்படங்களை எடுப்பதற்காக BigFoot Creations முரளி கிருஷ்ணா கேமரா, 
விளக்குகள் சகிதம் கோலாலும்ப்பூரிலிருந்து சுங்கைப்பட்டாணிக்கு வந்திருந்தார்.
இரண்டு வாரங்களாக உடல் நிலை சரியாக இல்லை. தொண்டைக் கட்டு, கரகரப்பு மாறவில்லை. இடுப்புப் பிடிப்பு. 
மதியம் வரை சமாளிக்க முடியுமா என்று பார்த்தோம். முடியவில்லை. அறவே முடியவில்லை. நான்கும் அருமையான டாப்பிக்குகள். இதுவரைத் யாரும் தொட்ட தில்லை. இப்போதைக்கு யாரும் தொடப்போவதுமில்லை. அவையெல்லாம் எடுத்து வெளியிடப்படவில்லையென்றால் அவை தமிழியத்திற்குப் பெரும் இழப்புத்தான். 
சந்தேகமேயில்லை.
ஆகையால்தான் அவ்வளவு ஆர்வமுடன் அவற்றை எடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்தது. 
அதான்.
முடியும்போது எதையும் செய்துவிடவேண்டும் என்பது. 
Time And Tide Wait For No Man.
பாவம். முரளி கிருஷ்ணா வெறுங்கையோடு திரும்பினார். கோலாலும்ப்பூரிலிருந்து வந்து சுங்கைப்பட்டாணியில் ரூம் எடுத்துத் தங்கி - ரூம் வாடகை, பெட்ரோல் செலவு, இரண்டு நாட்கள்..... வீணாகிப் போயின.
அதான்.
முடியும்போது எதையும் செய்துவிடவேண்டும் என்பது. 
Time And Tide Wait For No Man.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Monday, 11 July 2011

SETHU MADHAVAN

சேதுமாதவன்


அம்பிகை மதுரையையாண்ட மலயத்துவச பாண்டியனின் யாகத்தில் வந்து தோன்றி அந்தப் பாண்டியரின் மகளாக தடாதகைப் பிராட்டி, என்னும் பெயரில் வளர்ந்து வந்தாள். ஆலவாய் அழகனாகிய சொக்கலிங்கப்பெருமான் மீனாட்சியாகிய தடாதகையை வென்று மணம் புரிந்து இருவரும் மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர்களாக இருப்பது யாவரும் அறிந்தது.
பாண்டிய மன்னனின் மகளை சிவபெருமான் மணந்த வரலாறுதான் அனவரும் அறிந்தது.
பெருமாளும் இன்னொரு பாண்டியமன்னனின் மகளை மணந்திருக்கிறார்.
சுந்தர பாண்டியன் என்றொரு மன்னன். மதுரையை ஆண்டுவந்தான்.
"பாண்டிய மன்னன் என்றால் மதுரையைத்தானே ஆண்டிருக்கவேண்டும்? அதையேன் தனியாகச் சொல்லவேண்டும்?", என்று யாராவது கேட்கக்கூடும்.      
         தனியாகத்தான் சொல்லவேண்டும். ஏனெனில் ஐந்து பாண்டியர்கள் ஐந்து இடங்களிலிருந்துகொண்டு ஒரே சமயத்தில் ஆண்டு வந்ததுண்டு. தலைமைப் பாண்டியனாக இருப்பவர் மதுரையில் இருந்தார்.
         இவர்கள் மட்டுமில்லாமல் வேறு சில பாண்டிய மரபினரும்கூட வேறு சில இடங்களில் இருந்து ஆண்டார்கள். உச்சங்கி பாண்டியர் என்றொரு மரபு இருந்தது. இன்னும் சில பாண்டியக்குடியினர் கங்கைச் சமவெளியில் குடியேறியிருந்தனர். அவர்களின் வழிவந்தவர்கள் இன்றும் இருக்கிறார்கள். கடல் கடந்து சில அரசுகளையும் பாண்டியர்கள் நிறுவி யிருக்கின்றனர்.
மதுரைக்கு வருவதற்கு முன்பே பாண்டியர்கள் தென்மதுரை, கபாடபுரம், மணலூர் என்னும் நகரங்களில் இருந்து ஆட்சி புரிந்தனர். தென்மதுரையும் கபாடபுரமும் கடலுக்குள் மூழ்கிவிட்டன.
இந்த சுந்தர பாண்டியனுக்கு மனவி விந்தியாவல்லி. இருவரும் சேதுவில் கடலாடச் சென்றிருந்தனர். அங்கு ஸ்ரீலட்சுமி அவதரித்திருந்தாள்.
அவளைப் பார்த்தவுடன் சுந்தரபாண்டியனும் விந்தியாவல்லியும் அவளைத் தம்முடைய மகளாக ஏற்றுக்கொண்டு தாங்களே வளர்த்து வந்தனர்.
அவளுக்குத் திருமணப் பருவ வயது வந்தபோது மகாவிஷ்ணு ஒரு சிவ வேதியராக உருவெடுத்து வந்தார். நந்தவனத்தில் மலர் பறித்துக் கொண்டிருந்த கன்னிப்பெண் ஸ்ரீ¢லட்சுமியைக் கரம்பிடித்தார்.
சுந்தரபாண்டியரிடம் ஸ்ரீலட்சுமி முறையிட்டாள். சுந்தரபாண்டியர் வேதியரை விலங்கிட்டுச் சிறையில் அடைத்துவைத்தார்,
மகாவிஷ்ணு தாம் யார் என்பதை சுந்தரபாண்டியரின் கனவில் வந்து அறிவுறுத்தினார்.
பாண்டியனாரும் மனமகிழ்ந்து ஸ்ரீலட்சுமியைப் பெருமாளுக்குத் திருமணம் செய்வித்தார்.
திருமாலும் அவருக்கு வரம் தந்து சேதுவுக்கு ஸ்ரீலட்சுமியுடன் சென்று அங்கு 'சேதுமாதவன்' என்னும் பெயரில் எழுந்தருளினார்.
இந்த வரலாற்றைச் 'சேது புராணம்' என்னும் நூலில் காணலாம்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Saturday, 25 June 2011

VIGNA NAASANA GANAPATHI


விக்னநாசன கணபதி
விநாயகருக்குப் பதினாறு வகையான மூர்த்தங்கள் இருக்கின்றன.
அவருக்குச் சிறப்பாக பதினாறு நாமங்கள் கொண்ட சோடச நாமாவளியும் இருக்கிறது.
இந்தச் சிறப்பான நாமாவளி விநாயகரின் விக்னநாசன கணபதி அம்சத்துக்கு உரியது.
விநாயகரை விக்னநாசனனாக வழிபடுவதற்கென்று தனிப்பட்ட மந்திரங்கள் இருக்கின்றன. 'விக்னேஸ்வர சோடச நாமம்' என்று பெயர் பெற்றவை.
சங்கடங்களை நீக்குவதற்கென்று சங்கடஹர கணபதி. அதுபோலவே விக்னங்களை நீக்குவதற்கு விக்னநாசனன் அல்லது விக்னஹரன்.
விக்னநாசன கணபதியின் சோடச நாமங்களைத் தனித்தனியாகவும் சொல்லலாம். பதினாறையும் ஒரே மந்திர சுலோக தோத்திரமாகவும் சொல்லலாம்.


ஸ¤முகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்ய§க்ஷ¡ பாலச்சந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:


இதனையே நாமாவளியாக:


ஸ¤முகாய நம:
ஏகதந்தாய நம:
கபிலாய நம:
கஜகர்ணகாய நம
லம்போதரய நம
விகடாய நம
விக்நராஜாய நம
விநாயகாய நம
தூமகேதவே நம
கணாத்யக்ஷ¡ய நம
பாலச்சந்த்ராய நம
கஜானனாய நம
வக்ரதுண்டாய நம
சூர்ப்பகர்ணாய நம
ஹேரம்பாய நம
ஸ்கந்தபூர்வஜாய நம


                இவை அனைத்திற்கும் சுருக்கமான பதார்த்தமும் - பத +அர்த்தம் - சொல்லும் அதன் பொருளும் - இருக்கிறது. அதே சமயத்தில் நீண்ட விரிவான பாஷ்யம் போன்ற விளக்கவுரையும் இருக்கிறது.


                சுருக்கமான பதவுரையை எளிமைப்படுத்திச் சொல்கிறேன்.


ஸ¤முகாய நம: = மங்கலகரமான முறுவலுடன் கூடிய இனிய முகத்தோன்
ஏகதந்தாய நம: = ஒற்றைத் தந்தமுடையவன்
கபிலாய நம: = கபில நிறமுடையவன்
கஜகர்ணகாய நம = யானைக்காது உடையவன்
லம்போதராய நம = தொப்பையான வயிற்றையுடையவன்
விகடாய நம = வேடிக்கையானவன்
விக்நராஜாய நம = விக்னங்களை மேலாதிக்கம் செய்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அடக்கி ஆளும் அரசன்
விநாயகாய நம = தனக்கு மேலாக உள்ள நாயகன் - தலைவன் யாரும் இல்லாதவன்.
தூமகேதவே நம = புகை போன்ற வண்ணம் கொண்ட உருவம் உடையவன்
கணாத்யக்ஷ¡ய நம = கணங்களுக்கு அதிபதியாக உள்ளவன்
பாலச்சந்த்ராய நம = நெற்றியில் சந்திரனை அணிந்துள்ளவன்
கஜானனாய நம = யானை முகத்தோன்
வக்ரதுண்டாய நம = வளைந்த துதிக்கையை உடையவன்
சூர்ப்பகர்ணாய நம = முறம் போன்ற காது உடையவன்
ஹேரம்பாய நம = ஐந்து செம்முகங்களும் மஞ்சள் நிறமும் பத்துக்கரங்களும் கொண்டு, சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பவன்.
ஸ்கந்தபூர்வஜாய நம = முருகனுக்கு முன்பு தோன்றியவன்


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Thursday, 23 June 2011

KATTABOMMU -#1

கட்டபொம்மு-#1

வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கரின் வரலாற்றில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. 
ஜெகவீரபாண்டியனார் என்னும் பெரியவர் ஒருவர் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதிய நூலின்மூலமே 'கட்டபொம்மு வரலாறு' நூல் வடிவில் வெளிவந்தது. அதற்கும் முன்னர் கால்டுவெல் பாதிரியார் போன்றோர் எழுதிய குறிப்புகள்தாம் இருக்கின்றன. நாட்டுப்புறப் பாடல்களும் நாடோடி இலக்கியமாகவும்கூட அவருடைய வரலாறு விளங்கியது.
சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார் ஒரு சிறு நூலை வெளியிட்டார். 
        'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்னும் அந்த நூலின் முகப்பு அட்டை, உணர்வைத் தூண்டுவதாக அமைந்திருந்தது.
அந்த நூல் பிரபலமாகி Best Seller-ஆக விளங்கியது.
அதே நூலின் அடிப்படையில் பந்துலு என்பவர் வரலாற்றுப் படம் ஒன்றைத் தயாரித்தார். அவரேதான் கப்பலோட்டிய தமிழன் படத்தையும் எடுத்தவர். 
சிவாஜி கணேசன்தான் கட்டபொம்மு.  
சிவாஜியின் பெர்ஸனாலிட்டிக்கு ஏற்ப கட்டபொம்முவின் பாத்திரம் கட்டிங் அண்ட் ·பிட்டிங் செய்யப்பட்டது. 
அந்தப் பாத்திரம்தான் இன்று நாம் அறிந்த கட்டபொம்மன்.
ஆனால் கட்டபொம்முவைப் பற்றி வேறு பல கதைகளும் குறிப்புகளும் இருந்தன. அவற்றை யாரும் சீந்துவதில்லை. 
அவற்றை எடுத்துப்பார்த்தபோது முற்றிலும் வேறுவகையான வரலாறு தென்பட்டது. 
பல்துறை வல்லுனராகிய கல்கண்டு தமிழ்வாணன் அவற்றை யெல்லாம் வைத்து ஆராய்ந்து, "கட்டபொம்மு கொள்ளைக்காரன்' என்ற ஆய்வு நூலை வெளியிட்டார். 
கட்டபொம்முவுக்கு முன்னாலேயே, அவருடைய பாட்டன் பொல்லாப் பாண்டிய கட்டபொம்மு காலத்தியே பிரிட்டிஷ்/ஆர்க்காட்டு ஆதிக்கத்தை எதிர்த்த ஒரு வீரருடைய வரலாற்றைத் தொகுத்து, தமிழ்வாணன் அளித்தார். 
அவர்தான் நெற்கட்டுஞ்செவ்வல் குறுநிலமன்னர் புலித்தேவர் எனப் படும் பூலித்தேவர். 
ஆனானப்பட்ட கமாண்டண்ட் கான் சாஹிபையே எதிர்த்து, நின்று பிடித்துப் பார்த்தவர். 
அந்த வரலாற்றின் அடிப்படையில் ஈஆர் சகாதேவன் என்னும் நடிகரை வைத்து நாடகமும் அதன் பிறகு ஒரு படமும் எடுத்தார்.
தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் ந.சஞ்சீவி சிவகங்கைச் சீமை மருது சேர்வைக் காரர்களைப் பற்றி ஆராய்ந்து, 'மருதிருவர்', 'மானங்காத்த மருது பாண்டியர்' என்னும் இரு நூல்களை எழுதினார். 
அத்துடன் 'கான் சாகிப்' என்னும் குட்டி நூலையும் எழுதினார்.

மருது பாண்டியர் வரலாறு கவியரசு கண்ணதாசனால் 'சிவகங்கைச் சீமை' என்னும் பெயரில் படமாக்கப்பட்டது. நல்ல நடிப்பு, நல்ல வசனம், நல்ல பாடல்கள் எல்லாமே இருந்தும் வண்ணமில்லாப் படமாக இருந்ததாலும், அப்போது ஓடிய சிவாஜியின் கட்டபொம்மனுக்கு இருந்த விளம்பரம் போன்ற சில அம்சங்களுக்கு ஈடுகொடுக்கமுடியாததாலும் அது அதற்கு முன்னால் நிற்க முடியாமல் போய்விட்டது. 
அது பாக்ஸ் ஆ·பீஸ் தோல்வியாக இருந்தாலும் பிராபல்யம் இல்லாது போய்விட்டாலும் அது ஒரு Masterpiece; Film Classic
பாக்ஸ் ஆ·பீஸ் தாக்கத்தை வைத்து எதையும் நிர்ணயித்து விடக் கூடாது. 
கமலஹாசன் நினைத்த மாதிரி கான் சாகிபின் வரலாற்றைப் படமாக்க முடியவில்லை. 
        நல்லவேளை. இல்லையென்றால் கான் சாஹிபைக் குதறிப் போட்டு கொத்துப் புரட்டாவாக்கி கையேந்து விலாஸில் ப்லாஸ்டிக் பேப்பரில் வைத்துக் கொடுத்திருப்பார்.
கட்டபொம்மு வரலாற்றில் பல Versions நிலவுகின்றன என்றும் சொன்னேன். 
அவற்றில் ஒரு version-ஐப் பார்ப்போம்..............
அடுத்த மடல்களை எதிர்பாருங்கள்..........

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


ARTHA SATRA OF KAUTILYA @ CHANAKYA

சாணக்கியர் என்னும் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம்
ஓர் அறிமுகம்

அர்த்தசாஸ்திரம் என்றால் நினைவுக்கு வருபவர் சாணக்கியர்.
அர்த்த சாஸ்திரத்தை சாணக்கியர் மட்டுமே எழுதினார் என்ற எண்ணம் ஒன்று தற்கால இந்தியர்களிடம் இருக்கிறது.
'அர்த்த சாஸ்திரம்' என்பது அறம், பொருள், இன்பம், வீடு எனப்படும் தர்ம, காம, அர்த்த, மோக்ஷம் என்னும் நான்கில் பொருள்அல்லது 'அர்த்த' என்னும் துறையைப் பற்றிய சாஸ்திரம்.
அப்பாடா!
ஒருவகையாக define செய்தாச்சு.
சாக்ரட்டெஸ் சொன்னமாதிரி "ஒரு விஷயத்தை அது இன்னது என்றோ, ஒரு கேள்வி எதைப் பற்றியது என்றோ define செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்துவிட்டால் முக்காலே மூணு வீசம் காரியம் பூர்த்தியாகிவிட்டது என்றாகிவிடும்".
வாஸ்தவம்தான்.
'எதைப் பற்றி நாம் ஐயப்பாடு கொண்டிருக்கிறோம்; எதைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது; என்ன பிரச்னை'என்பதை நாம் புரிந்து கொண்டு வரையறுத்துக் கொள்ளவில்லையென்றால் ஒரு மாயச்சுழலில் மாட்டிக்கொள்ள நேரிடும்.

சில மடற்குழுக்களில் நடைபெறும் பரிமாற்றங்களையும் பல ப்லாகுகளையும் பார்த்தாலேயே இது நன்கு புரிந்துவிடும்.
பொழுதைப் போக்கவேண்டும் என்று அங்கெல்லாம் போகிறவர்களுக்கு அதெல்லாம் தட்டுப்படமாட்டாது. அதற்காகத்தானே அவர்கள் அங்கு போகிறார்கள். இருக்கக்கூடிய clutter-இல் இன்னும் கொஞ்சம் clutter-ஐக் கொட்டிக்கொள்கிறார்கள். அது அவர்களுக்குப் பிடிக்கிறது.
அதது அவரவருக்கு; அதது அங்கங்கு.

அர்த்த சாஸ்திரத்திற்கு வருகிறேன்.

அர்த்த சாஸ்திரம் என்பது ஒரே ஒரு துறையைப் பற்றியது மட்டுமில்லை. அதற்குள் பல பிரிவுகள் இருக்கின்றன.
சாணக்கியர் எழுதியது என்பதால் அது ராஜதந்திரம் பற்றியது என்று நினைப்பார்கள். அதுவும் குறிப்பாக சாணக்கியர் என்னும் பெயரைக் கேட்டதுமே 'அரசியல் சூழ்ச்சி' என்றுதான் உருவகம் தோன்றும்.
பார்த்தீர்களா!
பாரடைம் என்று முன்பு சொன்னேனல்லவா? இதெல்லாம் Paradigmatic எண்ண ஓட்டம்தான்.
சாணக்கியருக்குக் கௌட்டில்யர் என்றொரு பெயரும் உண்டு.
அந்தப் பெயரை ஒட்டி 'கௌட்டில்லியம்' என்று அவர் இயற்றிய அர்த்த சாஸ்திர நூலைக் குறிப்பிடுவார்கள்.
அதில் அவர் பல விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார்.
அவற்றில் சில ராஜதந்திரம், ராஜரீகம், நிர்வாகம், அரசு இயல் போன்றவை.
நாணயம் அடிப்பதுபற்றிக்கூட அவர் எழுதியிருக்கிறார்.
வெள்ளிநாணயம் என்றால் அது எத்தனை கனமாக இருக்கவேண்டும்; என்ன எடை இருக்கவேண்டும்; அந்த வெள்ளியில் எந்தெந்த உலோகங்கள் எந்த விகிதத்தில் கலந்திருக்கவேண்டும். அச்சு என்பது எப்படி இருக்கவேண்டும். அக்கசாலை எப்படி இருக்கவேண்டும் என்பதையெல்லாம் வரையறுத்துள்ளார்.
அக்கசாலை என்பது நாணயம் அச்சிடும் இடம். Mint என்று சொல்லப் படுவது.
சென்னையின் ஒரு முக்கியமான பஸ் ரூட்டாக Mint இருந்தது. ஏனெனில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு பிரிட்டிஷ்காரர்களின் அக்கசாலை இருந்தது.

சாணக்கியர் எழுதியுள்ள நூலில் போரியலைப் பற்றியும் காணலாம்.
போரியல் என்றதும் சிலருக்கு ஸ¤ன் ட்ஸ¥ Sun Tzu பற்றிய ஞாபகம் வந்துவிடும்.ஸ¤ன் ட்ஸ¥ சீனர்களில் ஒரு பெரிய போரியல் விற்பன்னர். அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்து கொள்ள முடிகிறது.
அவரை ஆதரித்த வள்ளலாக விளங்கியவர் ஒரு சீனச் சிற்றரசர்.
ஸ¤ன் ட்ஸ¥வை அவர் தம்முடைய போரியல் ஆலோசகராக வைத்துக் கொண்டதற்கு ஒரு பின்னணி உண்டு......

இன்னும் வரும்......

Wednesday, 22 June 2011

THARKA AND NYAYA SASTRAஇந்திய தர்க்க, நியாய சாஸ்திரம் -#1

முன்னர் சாண்டில்யன் எழுதிய 'மன்னன் மகள்' நாவலைப் பற்றிய விமரிசனத்தில் 'கௌடில்யரின் தர்க்க சாஸ்திரம்' என்று காணப் பட்டிருந்தது. 
அந்த நாவலின் நாயகனாகிய கரிகாலன், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் படித்தவன். அர்த்த சாஸ்திரம் என்பது இந்தியர்களுடைய பதினெட்டு வித்யா ஸ்தானங்களில் ஒன்று. 
'பொருள் நூல்' என்று இதனைத் தமிழில் கூறுவார்கள். 
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பனவற்றைத் தமிழில் நாம் அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்கிறோம்.
இதில் பொருள் நூலாக விளங்குவது அர்த்தசாஸ்திரம்.
இதைப் பற்றி ஏற்கனவே அகத்தியத்தில் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறோம். 
தர்க்க சாஸ்திரம் என்பது இன்னொரு துறை. 
இதுவும் இந்தியர்களின் பதினெட்டு வித்யா ஸ்தானங்களில் ஒன்றுதான். 
ஆங்கிலத்தில் இதை Logic என்று சொல்கிறோம்.
தமிழில் 'அளவை சாஸ்திரம்' என்று சொல்கிறோம்.


தர்க்க சாஸ்திரத்தைப் பற்றி எழுத ஆரம்பித்து அந்தத் தொடரில் நான் எழுதிய மடல்களைத் தொகுத்து அனுப்பியுள்ளேன். 

அதன் பின்னர் இந்தியர்களின் தர்க்க சாஸ்திரத்தைப் பற்றி சொல்லி யிருந்தேன். நியாய சாஸ்திரம் என்றும் குறிப்பிடுவார்கள்.
அளவை சாஸ்திரம் என்றும் இதனைச் சொல்வார்கள். 
Logic என்பது ஆங்கில மரபு. 
இந்திய அளவை சாஸ்திரம் மிகவும் வளமுடையது. கல்லைக் கசங்கிப் பிழிந்து சாரத்தை எடுப்பது போன்ற தன்மை படைத்த தர்க்க முறைகள் நம்மிடம் இருக்கின்றன. 
கையில் இருப்பதைக் கையால் உணர்ந்து கண்ணாலும் காண்பது போன்ற நேரடியான உண்மையை 'ஹஸ்தாமலக நியாயம்' என்று சொல்வார்கள். உள்ளங்கை நெல்லிக்கனி என்பது எல்லாருக்கும் பரிச்சயமாயிருக்கும். 
ப்ரத்யக்ஷப் பிரமாணம் என்பது கண்ணால் காண்பதே உண்மை, அதுவே அத்தாட்சி என்னும் நியாயம். 
கண்ணால் பார்க்கமுடியாதது; அதை அனுமானத்தில் தெரிந்து கொள்வது எப்படி என்பதைச் சொல்லும் முறைகளும் சில இருக்கின்றன. 
மலையின் உச்சியில் நெருப்பு இருக்கிறது. 
எங்கு புகை யிருக்கிறதோ அங்கு நெருப்பு இருக்கும். 
நெருப்பில்லாமல் புகையாது. 
மலையின் உச்சியில் புகை இருக்கிறது. 
ஆகவே மலையின் உச்சியில் நெருப்பு இருக்கிறது. 


இந்த விஷயத்தில் நெருப்பு இருப்பதை நாம் காணவில்லை. ஆனால் புகையை வைத்து நெருப்பும் அங்கு இருப்பதாக அனுமானம் செய்து விடுகிறோம்.
இதில் Fallacy என்பது உண்டு. 
மலையின் உச்சியில் இருப்பது புகைதான் என்பது என்ன நிச்சயம்? மூடு பனியாக இருக்கலாம். மேகமாக இருக்கலாம். 
பல தவறான வாதங்களும் உண்டு. 
எல்லா மனிதர்களும் மிருக இனத்தைச் சேர்ந்தவர்கள்.
எல்லாக் குரங்குகளும் மிருக இனத்தைச் சேர்ந்தவை. 
ஆகவே மனிதரெல்லாம் குரங்கு. 
இது தவறான தர்க்கவாதம். 


ஆராய்ச்சி நெறி முறைகளில் இந்திய நியாய சாஸ்திரம் மிகவும் அதிகமாக உதவக் கூடியது. 


தர்க்கசாஸ்திரத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். 
அந்த மாதிரி நேரத்தில் தர்க்க சாஸ்திரத்தைப் பற்றி சொல்லக் கூடிய ஆள் நானாகத்தான் இருக்கும். 

பார்க்காததையும் ஊகித்தறியும் சில தார்க்கீக முறைகளில் ஒன்றைச் சொன்னேன். 
ஒரு ஆசாமி இருக்கிறான். 
அவன் பெயர் குண்டு ராமன். 
உடல் மிகவும் பருமனாக வாட்டசாட்டமாக இருந்ததால் அவனுக்கு அப்பெயர். 
ஆனால் அவன் உணவு சாப்பிட்டதை யாரும் பார்த்ததேயில்லை. 
பகல்பூராவும் அவன் பாட்டுக்கு அவன் பார்க்கவேண்டிய வேலையைப் பார்ப்பான். இல்லையெனில் தூங்கிக்கொண்டிருப்பான். 


தர்க்கவாதி ஒருவர் சொன்னார்: 
"குண்டு ராமன் பகலுண்ணான்; 
இரவுண்பான்". 


இரவுண்பான் என்பது அவருடைய முடிபு.
எப்படி அதனைச் சொல்கிறார்? 


தர்க்கவாதி மேலும் சொல்கிறார்: 
"உணவு உண்ணாதான் உடல் மெலிந்திருப்பான். குண்டு ராமன் மெலிய வில்லை. மாறாக பருமனாக இருக்கிறான்". 
தர்க்கவாதி இன்னும் சொல்கிறார்: 
"உணவை அதிகமாக சாவகாசமாக உண்டால் உடல் பருமனாக ஆகும்". 
"குண்டுராமன் பகலில் உண்ணாததால் வேறு ஏதோ நேரத்தில் உண்ண வேண்டும்". 
"அதுவும் யாரும் பார்க்காத நேரமாக இருக்கவேண்டும்". 
"ஆகவே குண்டுராமன் இரவில் உண்பவனாக இருத்தல் வேண்டும்". 


துணிபு: 'பகலுண்ணான், இரவுண்பான் குண்டுராமன்'.


இந்த தார்க்கிக்க வாதத்தை நான் என்னுடைய சொந்தச் சொற்களால் சொந்தமான பாணியில் சொல்லியிருக்கிறேன். 
உங்களில் யாருக்கும் இந்திய தர்க்க சாஸ்திரம் பரிச்சயமாக இருந்தால் நீங்கள் வேறு விதமாகப் படித்திருக்கக்கூடும்.


இதற்கு தர்க்கசாஸ்திரத்தில் ஒரு பெயர் உண்டு: 


'அருத்தாபத்தி நியாயம்'.


இன்னும் வரும்......

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tuesday, 21 June 2011

TOK PISIN

மொழிச்சிதைவில் உருவான மொழி

சில ஆண்டுகளுக்கு முன்னர் யூனெஸ்க்கொ நடத்திய கணிப்பின்படி அந்தச் சமயத்தில் ஆறாயிரத்து எழுநூற்றுச்சொச்சம் மொழிகள் இருந்தனவாம்.
அவற்றில் பாதி, மிகக்குறுகிய காலத்தில் மறைந்துவிடக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கியிருந்தன.
தற்காலத்தில் விளங்கும் Information Explosion, இடம் பெயர்தல், வேலை வாய்ப்புகள், படிப்பு, டீவீ, சினிமா, சமயத்தாக்கங்கள், அரசு மொழிகளின் ஆதிக்கம், வர்த்தகம், பெரும்பான்மையினர் பேசும் மொழிகளின் தாக்கம் முதலிய சில முக்கிய காரணங்களால் மொழிகளில் பெரும்பான்மையின அழிந்துபோய்விடும் என்று யூனெஸ்க்கொ ஆய்வு கூறுகிறது.
பல மொழிகள் Pidginisation, Creolisation போன்ற மாற்றங்களுக்கும் ஆளாக நேரிடும்.முக்கியமாக ஆதிவாசிகள் பேசும் மொழிகள் விரைவில் காணாமற் போகக்கூடும். நியூ கினீ என்னும் தீவு ஆஸ்திரேலியாவுக்கு வடக்கில் உள்ள பெருந்தீவு. உலகிலேயே நான்காவது பெரிய தீவாக அது இருக்கக்கூடும். முதல் மூன்றை நீங்களே தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்.
அந்த தீவில் எண்ணூற்று முப்பது மொழிகள் பேசப்படுகின்றன.      
        பலவற்றுக்கு எழுத்துக்கூட கிடையாது. பேச்சு மொழிதான். அவற்றில் பத்து மொழிகள் சமீபத்தில் பேசுவாரற்று மறைந்துபோயின. மிச்சம் எண்ணூற்று இருபது மொழிகள் இருக்கின்றன.

நியூ கினீ தீவில் இரண்டு நாடுகள் உள்ளன. இந்தோனீசியாவின் பகுதியான இரியான் ஜயாவும் தனிநாடாக விளங்கும் பாப்புவா நியூகினீயும். இந்தோனீசியாவின் அரசு மொழியாகிய பாஹாஸா இந்தொனேசியாவின் தாக்கம் இரியன் ஜயாவில் உண்டு.
பாப்புவா நியூகினியில் உள்ள முக்கிய மொழி Tok Pisin என்பது. அது Pidgin Talk என்னும் ஆங்கிலச்சொல்லின் மருவல். அங்குள்ள கஜபுஜ மொழிக் கதம்பம், சீனம், மலாய், ஆங்கிலம் ஆகியவற்றின் கசபுசாவெல்லாம் சேர்ந்து உருவாகியதுதான் பிட்ஜின் மொழி. அன்றாட வழக்கிற்காக அந்த மொழி உருவாகியது. ஆகவே அதனை Business Talk மொழி என்று அழைத்தார்கள். அது தேய்ந்துபோய் பிட்ஜின் ஆகி, பிசின் ஆகி இப்போது அதிகாரபூர்வ மொழியாகிய Tok Pisin ஆகத் திகழ்கிறது.
இது ஒரு தினுசான Linguistic Evolutionதான்.
இன்னும் பத்து இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் மொழி எப்படி இருக்கும்?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday, 19 June 2011

SWORD OF SHIVAJI


பவானி தேவி தந்த சிவாஜி வாள்


இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குக் கொண்டுபோகப்பட்ட அரிய பொருள்கள் அனேகம். கணக்கில் அடங்கமாட்டா. ஏனெனில் அதையெல்லாம் கணக்கெடுக்கக்கூடிய அளவில் எடுத்துச் செல்லப்படவில்லை. அள்ளிக் கொண்டு சென்றார்கள். எத்தனையோ யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் தூக்கிச்சென்றிருக்கின்றன!
சாதாரணமாக மக்களுக்குத் தெரிவது கோகினூர் வைரமும் மயிலாசனமும்தான்.
இப்போது வெளிநாட்டில் இருக்கும் பொருள்களின் பட்டியலே மிகப் பெரிய பட்டியல்.
அதில் சிவாஜியின் வாளும் இருக்கிறது.

சிவாஜி ஒரு சாக்தர். தாந்திரீக வழிபாட்டில் அவருக்கு ஈடுபாடு இருந்திருக்கிறது. அவருக்கு இரண்டு முறை முடிசூட்டும் வைபவம் நடந்தது. அதில் ஒன்று தாந்திரீக முறையில் நடந்தது.

ஆஞ்சநேய உபாசகராகிய ஸ்மார்த்த ராமதாசர் அவருடைய குரு.


ஸ்மார்த்த ராமதாசர் எப்படி ஆஞ்சநேயரை உபசனா மூர்த்தியாக வசப்படுத்திக்கொண்டார் என்பது ஒரு ரசமான வரலாறு.
சிவாஜி அம்பாள் பவானியின் வழிபாட்டைச் சிறப்பாகச் செய்துவந்தார்.
முகலாயரை அடக்குவதற்காக அவருக்கு பவானி அம்பாள் ஒரு வாளைத் தந்திருக்கிறாள்.அந்த வாள் சிவாஜிக்கு மனோதைரியத்தையும் மன உறுதியையும் தொடர்ந்த வெற்றிகளையும் கடைசிவரைக்கும் கொடுத்துவந்தது.


சிவாஜிக்குப் பிறகு அவருடைய வாரிசுகளான பான்ஸ்லே மன்னர்கள் வலுக்குறைந்து போய் பெயரளவில் ஆண்டுவந்தனர்.
உண்மையான அதிகாரமும் பலமும் பேஷ்வா எனப்படும் அமைச்சர்/தளபதி/தனாதிகாரி/கவர்னர் ஆகிய பதவிகளின் கூட்டைக் கையில் வைத்திருந்த ஆட்களிடம்தான் இருந்தது.
அத்துடன் படைபலம் வைத்திருந்த ஆளுனர்கள், படைத்தலவர்கள் முதலியோரிடமும் இருந்தது. ஸிந்தியா, ஹோல்க்கார், கெய்க்வாட் போன்றோர் இந்த வட்டத்தில் அடங்குவர். இன்னும் பல நூற்றுக்கணக்கான மராத்தியர்கள் ஆங்காங்கு ஊர்களையும் பிரதேசங்களையும் கைப்பற்றிக்கொண்டு ஆண்டுவந்தனர்.
பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டபோது நூற்றுக்கும் மேற்பட்ட மராத்திய சமஸ்தானங்கள் இருந்தன. இன்னும் ஜமீன்கள் வேறு. பதினெட்டாம் நூற்றாண்டில் இவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். அது படிப்படியாகக் குறைந்துவிட்டது. 1857-இல் வெகுவாகக் குறைக்கப் பட்டுவிட்டது.
ஜான்ஸி போன்ற நாடுகள் பிரிட்டிஷாரால் பிடுங்கிக்கொள்ளப்பட்டு விட்டன.
இந்தப் பானிப்பட்டும் ஈஸ்ட் இண்டியா கம்பெனியும் மட்டுமில்லை யென்றால் நாமெல்லாம் கீற்றுநாமத்தைப் போட்டுக் கொண்டு மராத்தி பாஷையைப் பேசிக்கொண்டிருப்போம்.
பான்ஸ்லேக்களின் ஆட்சியில் சத்தாரா நாடு இருந்தது. இரண்டு மூன்று தலைமுறைகள் கழித்து சத்தாராவிலிருந்து கோல்ஹாப்பூர் பிரிந்துவிட்டது. அதையும் பான்ஸ்லேக்களின் ஒரு கிளையினர் ஆண்டனர்.


கோல்ஹாப்பூர் ராஜா வசம் சிவாஜியின் வாள் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் அந்த வம்சத்தைச் சேர்ந்த ஓர் அரசர் அதனை 'மொட்டைத்தலை மவராசா' என்று அன்பாகக் குறிப்பிடப்படும் ஏழாம் எட்வர்டு சக்கரவர்த்திக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார்.
அம்பாள் பவானி கொடுத்த கத்தி அது!
என்ன பிரமாதம்! அம்பாள் பவானியே அம்புட்டிருந்தால் அந்த ராஜா அவளையும்கூட அன்பளிப்பாக லண்டனுக்கு அனுப்பியிருப்பான், அந்த தோஸ்த்தி லண்டன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, 17 June 2011

THE EIGHT-ARMED WONDER


எண்தோள் வீசி நின்ற அற்புதன்


    அப்பர் பெருமான் திருவங்கமாலை என்னும் பாடலைப் பாடியுள்ளார். இந்தக் காலத்திலெல்லாம் இந்த மாதிரியான பாடல்கள் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போய்விட்டன.
    கோயில்களில்கூட யாராவது இந்தக் காலப் பாடகர்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப உருக்கமாகக் குரலை வைத்துக்கொண்டு தழுதழுக்கப் பாடிய பாடல்கள், அல்லது டபுக்குடப்பான் டப்பான் டப்பான் என்று தாளம் 
போட்டுக் கொண்டு பாடும் 'சாமிப் பாடல்கள்', அல்லது "காளியம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ ஆஆஆ"....." என்று டண்டனக்கா டணக்குனக்கா என்று உடுக்கு, பம்பை, உருமி, தவில் முதலியவற்றை இடித்து...... ஓ... திருத்தம் திருத்தம் - அடித்து ..... அந்த நிசும்பசூதினியையே திடுக்கிடவைக்கும் பாடல்களைத்தாம் போடுகிறார்கள்.
     இல்லையென்றால் பாம்பே 
சகோதரிகள் பாடிய பாடல்கள்.


    யார் இந்த திருவங்க மாலை, திருநீற்றுத் திருப்பதிகம், கோளறு திருப்பதிக மெல்லாம் பாடுகிறார்கள்?


    "யோவ்..... ரொம்ப இழுக்காதய்யா.... நேரமாயிக்கிட்டு போஹ¤தில்ல? தங்கம்,செல்லமே எல்லாம் போயிறப் போஹ¤து. அந்த ராதிகா புருசனோட கழுத்துல அருவால வெக்கிற எடத்துல விட்டிருக்காம்யா?..... ராதாரவிமேல பழி போடப் பாக்குறா பாவிப் பொம்பள.... வேகமா வேகமா....", என்று கோயில் தலைவர் தேவாரம் பாட வந்த ஆசாமியைப் பார்த்துச் சொல்வார்.

திருவங்க மாலை என்றால் என்னமோ ஏதோ என்று நினைத்துவிடாதீர்கள்.

"தலையே நீ வணங்காய்.....
தலை மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேறும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்"


    இதன் இரண்டாம் அடியை ஒரு முறைப் பாடியபோது......


"கண்காள் காண்மின்களோ
கடல் நஞ்சுண்ட கண்டன் தனை
எண்டோள் வீசி நின்றாடும் பிரான் தனைக்
கண்காள் காண்மின்களோ"

"எண்டோள்'னா என்னங்க?" என்று ஒருவர் தனியாகக் கேட்டார்.
"எட்டுத் தோள்கள். அதாவது எட்டுக் கைகளை வீசி ஆடுவது"
"சிவனுக்கு எப்பவும் நாலு கைதானே இருக்கு. எட்டுக் கை ஏது?"
"இருக்கு....... மாணிக்கவாசகர்கூட பாடியிருக்கார் இல்லையா......?

"அன்றே என்றன் ஆவியுடன் உடலும் உடமை எல்லாமும்
குன்றே அணையாய், என்னை ஆட் கொண்ட போதே கொண்டிலையோ?
இன்றோர் இடையூறு எனக்குண்டோ, எண்டோள் முக்கண் எம்மானே?
நன்றே செய்வாய், பிழை செய்வாய்.... நானோ இதற்கு நாயகமே?"

     அந்த எண்டோள் கொண்ட எம்மானை மேலே உள்ள படத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.
    இந்த சிலைக்குத் 'திரிபுர சம்மார மூர்த்தி' என்று பெயர்.  
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$