Saturday, 25 June 2011

VIGNA NAASANA GANAPATHI


விக்னநாசன கணபதி
விநாயகருக்குப் பதினாறு வகையான மூர்த்தங்கள் இருக்கின்றன.
அவருக்குச் சிறப்பாக பதினாறு நாமங்கள் கொண்ட சோடச நாமாவளியும் இருக்கிறது.
இந்தச் சிறப்பான நாமாவளி விநாயகரின் விக்னநாசன கணபதி அம்சத்துக்கு உரியது.
விநாயகரை விக்னநாசனனாக வழிபடுவதற்கென்று தனிப்பட்ட மந்திரங்கள் இருக்கின்றன. 'விக்னேஸ்வர சோடச நாமம்' என்று பெயர் பெற்றவை.
சங்கடங்களை நீக்குவதற்கென்று சங்கடஹர கணபதி. அதுபோலவே விக்னங்களை நீக்குவதற்கு விக்னநாசனன் அல்லது விக்னஹரன்.
விக்னநாசன கணபதியின் சோடச நாமங்களைத் தனித்தனியாகவும் சொல்லலாம். பதினாறையும் ஒரே மந்திர சுலோக தோத்திரமாகவும் சொல்லலாம்.


ஸ¤முகச்ச ஏகதந்தச்ச கபிலோ கஜகர்ணக:
லம்போதரச்ச விகடோ விக்நராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்ய§க்ஷ¡ பாலச்சந்த்ரோ கஜானன:
வக்ரதுண்ட: சூர்ப்பகர்ணோ ஹேரம்ப: ஸ்கந்தபூர்வஜ:


இதனையே நாமாவளியாக:


ஸ¤முகாய நம:
ஏகதந்தாய நம:
கபிலாய நம:
கஜகர்ணகாய நம
லம்போதரய நம
விகடாய நம
விக்நராஜாய நம
விநாயகாய நம
தூமகேதவே நம
கணாத்யக்ஷ¡ய நம
பாலச்சந்த்ராய நம
கஜானனாய நம
வக்ரதுண்டாய நம
சூர்ப்பகர்ணாய நம
ஹேரம்பாய நம
ஸ்கந்தபூர்வஜாய நம


                இவை அனைத்திற்கும் சுருக்கமான பதார்த்தமும் - பத +அர்த்தம் - சொல்லும் அதன் பொருளும் - இருக்கிறது. அதே சமயத்தில் நீண்ட விரிவான பாஷ்யம் போன்ற விளக்கவுரையும் இருக்கிறது.


                சுருக்கமான பதவுரையை எளிமைப்படுத்திச் சொல்கிறேன்.


ஸ¤முகாய நம: = மங்கலகரமான முறுவலுடன் கூடிய இனிய முகத்தோன்
ஏகதந்தாய நம: = ஒற்றைத் தந்தமுடையவன்
கபிலாய நம: = கபில நிறமுடையவன்
கஜகர்ணகாய நம = யானைக்காது உடையவன்
லம்போதராய நம = தொப்பையான வயிற்றையுடையவன்
விகடாய நம = வேடிக்கையானவன்
விக்நராஜாய நம = விக்னங்களை மேலாதிக்கம் செய்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அடக்கி ஆளும் அரசன்
விநாயகாய நம = தனக்கு மேலாக உள்ள நாயகன் - தலைவன் யாரும் இல்லாதவன்.
தூமகேதவே நம = புகை போன்ற வண்ணம் கொண்ட உருவம் உடையவன்
கணாத்யக்ஷ¡ய நம = கணங்களுக்கு அதிபதியாக உள்ளவன்
பாலச்சந்த்ராய நம = நெற்றியில் சந்திரனை அணிந்துள்ளவன்
கஜானனாய நம = யானை முகத்தோன்
வக்ரதுண்டாய நம = வளைந்த துதிக்கையை உடையவன்
சூர்ப்பகர்ணாய நம = முறம் போன்ற காது உடையவன்
ஹேரம்பாய நம = ஐந்து செம்முகங்களும் மஞ்சள் நிறமும் பத்துக்கரங்களும் கொண்டு, சிம்ம வாகனத்தில் அமர்ந்திருப்பவன்.
ஸ்கந்தபூர்வஜாய நம = முருகனுக்கு முன்பு தோன்றியவன்


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Thursday, 23 June 2011

KATTABOMMU -#1

கட்டபொம்மு-#1

வீரபாண்டிய கட்டபொம்மு நாயக்கரின் வரலாற்றில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. 
ஜெகவீரபாண்டியனார் என்னும் பெரியவர் ஒருவர் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுதிய நூலின்மூலமே 'கட்டபொம்மு வரலாறு' நூல் வடிவில் வெளிவந்தது. அதற்கும் முன்னர் கால்டுவெல் பாதிரியார் போன்றோர் எழுதிய குறிப்புகள்தாம் இருக்கின்றன. நாட்டுப்புறப் பாடல்களும் நாடோடி இலக்கியமாகவும்கூட அவருடைய வரலாறு விளங்கியது.
சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞான கிராமணியார் ஒரு சிறு நூலை வெளியிட்டார். 
        'வீரபாண்டிய கட்டபொம்மன்' என்னும் அந்த நூலின் முகப்பு அட்டை, உணர்வைத் தூண்டுவதாக அமைந்திருந்தது.
அந்த நூல் பிரபலமாகி Best Seller-ஆக விளங்கியது.
அதே நூலின் அடிப்படையில் பந்துலு என்பவர் வரலாற்றுப் படம் ஒன்றைத் தயாரித்தார். அவரேதான் கப்பலோட்டிய தமிழன் படத்தையும் எடுத்தவர். 
சிவாஜி கணேசன்தான் கட்டபொம்மு.  
சிவாஜியின் பெர்ஸனாலிட்டிக்கு ஏற்ப கட்டபொம்முவின் பாத்திரம் கட்டிங் அண்ட் ·பிட்டிங் செய்யப்பட்டது. 
அந்தப் பாத்திரம்தான் இன்று நாம் அறிந்த கட்டபொம்மன்.
ஆனால் கட்டபொம்முவைப் பற்றி வேறு பல கதைகளும் குறிப்புகளும் இருந்தன. அவற்றை யாரும் சீந்துவதில்லை. 
அவற்றை எடுத்துப்பார்த்தபோது முற்றிலும் வேறுவகையான வரலாறு தென்பட்டது. 
பல்துறை வல்லுனராகிய கல்கண்டு தமிழ்வாணன் அவற்றை யெல்லாம் வைத்து ஆராய்ந்து, "கட்டபொம்மு கொள்ளைக்காரன்' என்ற ஆய்வு நூலை வெளியிட்டார். 
கட்டபொம்முவுக்கு முன்னாலேயே, அவருடைய பாட்டன் பொல்லாப் பாண்டிய கட்டபொம்மு காலத்தியே பிரிட்டிஷ்/ஆர்க்காட்டு ஆதிக்கத்தை எதிர்த்த ஒரு வீரருடைய வரலாற்றைத் தொகுத்து, தமிழ்வாணன் அளித்தார். 
அவர்தான் நெற்கட்டுஞ்செவ்வல் குறுநிலமன்னர் புலித்தேவர் எனப் படும் பூலித்தேவர். 
ஆனானப்பட்ட கமாண்டண்ட் கான் சாஹிபையே எதிர்த்து, நின்று பிடித்துப் பார்த்தவர். 
அந்த வரலாற்றின் அடிப்படையில் ஈஆர் சகாதேவன் என்னும் நடிகரை வைத்து நாடகமும் அதன் பிறகு ஒரு படமும் எடுத்தார்.
தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் ந.சஞ்சீவி சிவகங்கைச் சீமை மருது சேர்வைக் காரர்களைப் பற்றி ஆராய்ந்து, 'மருதிருவர்', 'மானங்காத்த மருது பாண்டியர்' என்னும் இரு நூல்களை எழுதினார். 
அத்துடன் 'கான் சாகிப்' என்னும் குட்டி நூலையும் எழுதினார்.

மருது பாண்டியர் வரலாறு கவியரசு கண்ணதாசனால் 'சிவகங்கைச் சீமை' என்னும் பெயரில் படமாக்கப்பட்டது. நல்ல நடிப்பு, நல்ல வசனம், நல்ல பாடல்கள் எல்லாமே இருந்தும் வண்ணமில்லாப் படமாக இருந்ததாலும், அப்போது ஓடிய சிவாஜியின் கட்டபொம்மனுக்கு இருந்த விளம்பரம் போன்ற சில அம்சங்களுக்கு ஈடுகொடுக்கமுடியாததாலும் அது அதற்கு முன்னால் நிற்க முடியாமல் போய்விட்டது. 
அது பாக்ஸ் ஆ·பீஸ் தோல்வியாக இருந்தாலும் பிராபல்யம் இல்லாது போய்விட்டாலும் அது ஒரு Masterpiece; Film Classic
பாக்ஸ் ஆ·பீஸ் தாக்கத்தை வைத்து எதையும் நிர்ணயித்து விடக் கூடாது. 
கமலஹாசன் நினைத்த மாதிரி கான் சாகிபின் வரலாற்றைப் படமாக்க முடியவில்லை. 
        நல்லவேளை. இல்லையென்றால் கான் சாஹிபைக் குதறிப் போட்டு கொத்துப் புரட்டாவாக்கி கையேந்து விலாஸில் ப்லாஸ்டிக் பேப்பரில் வைத்துக் கொடுத்திருப்பார்.
கட்டபொம்மு வரலாற்றில் பல Versions நிலவுகின்றன என்றும் சொன்னேன். 
அவற்றில் ஒரு version-ஐப் பார்ப்போம்..............
அடுத்த மடல்களை எதிர்பாருங்கள்..........

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


ARTHA SATRA OF KAUTILYA @ CHANAKYA

சாணக்கியர் என்னும் கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம்
ஓர் அறிமுகம்

அர்த்தசாஸ்திரம் என்றால் நினைவுக்கு வருபவர் சாணக்கியர்.
அர்த்த சாஸ்திரத்தை சாணக்கியர் மட்டுமே எழுதினார் என்ற எண்ணம் ஒன்று தற்கால இந்தியர்களிடம் இருக்கிறது.
'அர்த்த சாஸ்திரம்' என்பது அறம், பொருள், இன்பம், வீடு எனப்படும் தர்ம, காம, அர்த்த, மோக்ஷம் என்னும் நான்கில் பொருள்அல்லது 'அர்த்த' என்னும் துறையைப் பற்றிய சாஸ்திரம்.
அப்பாடா!
ஒருவகையாக define செய்தாச்சு.
சாக்ரட்டெஸ் சொன்னமாதிரி "ஒரு விஷயத்தை அது இன்னது என்றோ, ஒரு கேள்வி எதைப் பற்றியது என்றோ define செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்துவிட்டால் முக்காலே மூணு வீசம் காரியம் பூர்த்தியாகிவிட்டது என்றாகிவிடும்".
வாஸ்தவம்தான்.
'எதைப் பற்றி நாம் ஐயப்பாடு கொண்டிருக்கிறோம்; எதைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது; என்ன பிரச்னை'என்பதை நாம் புரிந்து கொண்டு வரையறுத்துக் கொள்ளவில்லையென்றால் ஒரு மாயச்சுழலில் மாட்டிக்கொள்ள நேரிடும்.

சில மடற்குழுக்களில் நடைபெறும் பரிமாற்றங்களையும் பல ப்லாகுகளையும் பார்த்தாலேயே இது நன்கு புரிந்துவிடும்.
பொழுதைப் போக்கவேண்டும் என்று அங்கெல்லாம் போகிறவர்களுக்கு அதெல்லாம் தட்டுப்படமாட்டாது. அதற்காகத்தானே அவர்கள் அங்கு போகிறார்கள். இருக்கக்கூடிய clutter-இல் இன்னும் கொஞ்சம் clutter-ஐக் கொட்டிக்கொள்கிறார்கள். அது அவர்களுக்குப் பிடிக்கிறது.
அதது அவரவருக்கு; அதது அங்கங்கு.

அர்த்த சாஸ்திரத்திற்கு வருகிறேன்.

அர்த்த சாஸ்திரம் என்பது ஒரே ஒரு துறையைப் பற்றியது மட்டுமில்லை. அதற்குள் பல பிரிவுகள் இருக்கின்றன.
சாணக்கியர் எழுதியது என்பதால் அது ராஜதந்திரம் பற்றியது என்று நினைப்பார்கள். அதுவும் குறிப்பாக சாணக்கியர் என்னும் பெயரைக் கேட்டதுமே 'அரசியல் சூழ்ச்சி' என்றுதான் உருவகம் தோன்றும்.
பார்த்தீர்களா!
பாரடைம் என்று முன்பு சொன்னேனல்லவா? இதெல்லாம் Paradigmatic எண்ண ஓட்டம்தான்.
சாணக்கியருக்குக் கௌட்டில்யர் என்றொரு பெயரும் உண்டு.
அந்தப் பெயரை ஒட்டி 'கௌட்டில்லியம்' என்று அவர் இயற்றிய அர்த்த சாஸ்திர நூலைக் குறிப்பிடுவார்கள்.
அதில் அவர் பல விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார்.
அவற்றில் சில ராஜதந்திரம், ராஜரீகம், நிர்வாகம், அரசு இயல் போன்றவை.
நாணயம் அடிப்பதுபற்றிக்கூட அவர் எழுதியிருக்கிறார்.
வெள்ளிநாணயம் என்றால் அது எத்தனை கனமாக இருக்கவேண்டும்; என்ன எடை இருக்கவேண்டும்; அந்த வெள்ளியில் எந்தெந்த உலோகங்கள் எந்த விகிதத்தில் கலந்திருக்கவேண்டும். அச்சு என்பது எப்படி இருக்கவேண்டும். அக்கசாலை எப்படி இருக்கவேண்டும் என்பதையெல்லாம் வரையறுத்துள்ளார்.
அக்கசாலை என்பது நாணயம் அச்சிடும் இடம். Mint என்று சொல்லப் படுவது.
சென்னையின் ஒரு முக்கியமான பஸ் ரூட்டாக Mint இருந்தது. ஏனெனில் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு பிரிட்டிஷ்காரர்களின் அக்கசாலை இருந்தது.

சாணக்கியர் எழுதியுள்ள நூலில் போரியலைப் பற்றியும் காணலாம்.
போரியல் என்றதும் சிலருக்கு ஸ¤ன் ட்ஸ¥ Sun Tzu பற்றிய ஞாபகம் வந்துவிடும்.ஸ¤ன் ட்ஸ¥ சீனர்களில் ஒரு பெரிய போரியல் விற்பன்னர். அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்து கொள்ள முடிகிறது.
அவரை ஆதரித்த வள்ளலாக விளங்கியவர் ஒரு சீனச் சிற்றரசர்.
ஸ¤ன் ட்ஸ¥வை அவர் தம்முடைய போரியல் ஆலோசகராக வைத்துக் கொண்டதற்கு ஒரு பின்னணி உண்டு......

இன்னும் வரும்......

Wednesday, 22 June 2011

THARKA AND NYAYA SASTRAஇந்திய தர்க்க, நியாய சாஸ்திரம் -#1

முன்னர் சாண்டில்யன் எழுதிய 'மன்னன் மகள்' நாவலைப் பற்றிய விமரிசனத்தில் 'கௌடில்யரின் தர்க்க சாஸ்திரம்' என்று காணப் பட்டிருந்தது. 
அந்த நாவலின் நாயகனாகிய கரிகாலன், கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் படித்தவன். அர்த்த சாஸ்திரம் என்பது இந்தியர்களுடைய பதினெட்டு வித்யா ஸ்தானங்களில் ஒன்று. 
'பொருள் நூல்' என்று இதனைத் தமிழில் கூறுவார்கள். 
தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்பனவற்றைத் தமிழில் நாம் அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்கிறோம்.
இதில் பொருள் நூலாக விளங்குவது அர்த்தசாஸ்திரம்.
இதைப் பற்றி ஏற்கனவே அகத்தியத்தில் அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறோம். 
தர்க்க சாஸ்திரம் என்பது இன்னொரு துறை. 
இதுவும் இந்தியர்களின் பதினெட்டு வித்யா ஸ்தானங்களில் ஒன்றுதான். 
ஆங்கிலத்தில் இதை Logic என்று சொல்கிறோம்.
தமிழில் 'அளவை சாஸ்திரம்' என்று சொல்கிறோம்.


தர்க்க சாஸ்திரத்தைப் பற்றி எழுத ஆரம்பித்து அந்தத் தொடரில் நான் எழுதிய மடல்களைத் தொகுத்து அனுப்பியுள்ளேன். 

அதன் பின்னர் இந்தியர்களின் தர்க்க சாஸ்திரத்தைப் பற்றி சொல்லி யிருந்தேன். நியாய சாஸ்திரம் என்றும் குறிப்பிடுவார்கள்.
அளவை சாஸ்திரம் என்றும் இதனைச் சொல்வார்கள். 
Logic என்பது ஆங்கில மரபு. 
இந்திய அளவை சாஸ்திரம் மிகவும் வளமுடையது. கல்லைக் கசங்கிப் பிழிந்து சாரத்தை எடுப்பது போன்ற தன்மை படைத்த தர்க்க முறைகள் நம்மிடம் இருக்கின்றன. 
கையில் இருப்பதைக் கையால் உணர்ந்து கண்ணாலும் காண்பது போன்ற நேரடியான உண்மையை 'ஹஸ்தாமலக நியாயம்' என்று சொல்வார்கள். உள்ளங்கை நெல்லிக்கனி என்பது எல்லாருக்கும் பரிச்சயமாயிருக்கும். 
ப்ரத்யக்ஷப் பிரமாணம் என்பது கண்ணால் காண்பதே உண்மை, அதுவே அத்தாட்சி என்னும் நியாயம். 
கண்ணால் பார்க்கமுடியாதது; அதை அனுமானத்தில் தெரிந்து கொள்வது எப்படி என்பதைச் சொல்லும் முறைகளும் சில இருக்கின்றன. 
மலையின் உச்சியில் நெருப்பு இருக்கிறது. 
எங்கு புகை யிருக்கிறதோ அங்கு நெருப்பு இருக்கும். 
நெருப்பில்லாமல் புகையாது. 
மலையின் உச்சியில் புகை இருக்கிறது. 
ஆகவே மலையின் உச்சியில் நெருப்பு இருக்கிறது. 


இந்த விஷயத்தில் நெருப்பு இருப்பதை நாம் காணவில்லை. ஆனால் புகையை வைத்து நெருப்பும் அங்கு இருப்பதாக அனுமானம் செய்து விடுகிறோம்.
இதில் Fallacy என்பது உண்டு. 
மலையின் உச்சியில் இருப்பது புகைதான் என்பது என்ன நிச்சயம்? மூடு பனியாக இருக்கலாம். மேகமாக இருக்கலாம். 
பல தவறான வாதங்களும் உண்டு. 
எல்லா மனிதர்களும் மிருக இனத்தைச் சேர்ந்தவர்கள்.
எல்லாக் குரங்குகளும் மிருக இனத்தைச் சேர்ந்தவை. 
ஆகவே மனிதரெல்லாம் குரங்கு. 
இது தவறான தர்க்கவாதம். 


ஆராய்ச்சி நெறி முறைகளில் இந்திய நியாய சாஸ்திரம் மிகவும் அதிகமாக உதவக் கூடியது. 


தர்க்கசாஸ்திரத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். 
அந்த மாதிரி நேரத்தில் தர்க்க சாஸ்திரத்தைப் பற்றி சொல்லக் கூடிய ஆள் நானாகத்தான் இருக்கும். 

பார்க்காததையும் ஊகித்தறியும் சில தார்க்கீக முறைகளில் ஒன்றைச் சொன்னேன். 
ஒரு ஆசாமி இருக்கிறான். 
அவன் பெயர் குண்டு ராமன். 
உடல் மிகவும் பருமனாக வாட்டசாட்டமாக இருந்ததால் அவனுக்கு அப்பெயர். 
ஆனால் அவன் உணவு சாப்பிட்டதை யாரும் பார்த்ததேயில்லை. 
பகல்பூராவும் அவன் பாட்டுக்கு அவன் பார்க்கவேண்டிய வேலையைப் பார்ப்பான். இல்லையெனில் தூங்கிக்கொண்டிருப்பான். 


தர்க்கவாதி ஒருவர் சொன்னார்: 
"குண்டு ராமன் பகலுண்ணான்; 
இரவுண்பான்". 


இரவுண்பான் என்பது அவருடைய முடிபு.
எப்படி அதனைச் சொல்கிறார்? 


தர்க்கவாதி மேலும் சொல்கிறார்: 
"உணவு உண்ணாதான் உடல் மெலிந்திருப்பான். குண்டு ராமன் மெலிய வில்லை. மாறாக பருமனாக இருக்கிறான்". 
தர்க்கவாதி இன்னும் சொல்கிறார்: 
"உணவை அதிகமாக சாவகாசமாக உண்டால் உடல் பருமனாக ஆகும்". 
"குண்டுராமன் பகலில் உண்ணாததால் வேறு ஏதோ நேரத்தில் உண்ண வேண்டும்". 
"அதுவும் யாரும் பார்க்காத நேரமாக இருக்கவேண்டும்". 
"ஆகவே குண்டுராமன் இரவில் உண்பவனாக இருத்தல் வேண்டும்". 


துணிபு: 'பகலுண்ணான், இரவுண்பான் குண்டுராமன்'.


இந்த தார்க்கிக்க வாதத்தை நான் என்னுடைய சொந்தச் சொற்களால் சொந்தமான பாணியில் சொல்லியிருக்கிறேன். 
உங்களில் யாருக்கும் இந்திய தர்க்க சாஸ்திரம் பரிச்சயமாக இருந்தால் நீங்கள் வேறு விதமாகப் படித்திருக்கக்கூடும்.


இதற்கு தர்க்கசாஸ்திரத்தில் ஒரு பெயர் உண்டு: 


'அருத்தாபத்தி நியாயம்'.


இன்னும் வரும்......

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Tuesday, 21 June 2011

TOK PISIN

மொழிச்சிதைவில் உருவான மொழி

சில ஆண்டுகளுக்கு முன்னர் யூனெஸ்க்கொ நடத்திய கணிப்பின்படி அந்தச் சமயத்தில் ஆறாயிரத்து எழுநூற்றுச்சொச்சம் மொழிகள் இருந்தனவாம்.
அவற்றில் பாதி, மிகக்குறுகிய காலத்தில் மறைந்துவிடக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கியிருந்தன.
தற்காலத்தில் விளங்கும் Information Explosion, இடம் பெயர்தல், வேலை வாய்ப்புகள், படிப்பு, டீவீ, சினிமா, சமயத்தாக்கங்கள், அரசு மொழிகளின் ஆதிக்கம், வர்த்தகம், பெரும்பான்மையினர் பேசும் மொழிகளின் தாக்கம் முதலிய சில முக்கிய காரணங்களால் மொழிகளில் பெரும்பான்மையின அழிந்துபோய்விடும் என்று யூனெஸ்க்கொ ஆய்வு கூறுகிறது.
பல மொழிகள் Pidginisation, Creolisation போன்ற மாற்றங்களுக்கும் ஆளாக நேரிடும்.முக்கியமாக ஆதிவாசிகள் பேசும் மொழிகள் விரைவில் காணாமற் போகக்கூடும். நியூ கினீ என்னும் தீவு ஆஸ்திரேலியாவுக்கு வடக்கில் உள்ள பெருந்தீவு. உலகிலேயே நான்காவது பெரிய தீவாக அது இருக்கக்கூடும். முதல் மூன்றை நீங்களே தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்.
அந்த தீவில் எண்ணூற்று முப்பது மொழிகள் பேசப்படுகின்றன.      
        பலவற்றுக்கு எழுத்துக்கூட கிடையாது. பேச்சு மொழிதான். அவற்றில் பத்து மொழிகள் சமீபத்தில் பேசுவாரற்று மறைந்துபோயின. மிச்சம் எண்ணூற்று இருபது மொழிகள் இருக்கின்றன.

நியூ கினீ தீவில் இரண்டு நாடுகள் உள்ளன. இந்தோனீசியாவின் பகுதியான இரியான் ஜயாவும் தனிநாடாக விளங்கும் பாப்புவா நியூகினீயும். இந்தோனீசியாவின் அரசு மொழியாகிய பாஹாஸா இந்தொனேசியாவின் தாக்கம் இரியன் ஜயாவில் உண்டு.
பாப்புவா நியூகினியில் உள்ள முக்கிய மொழி Tok Pisin என்பது. அது Pidgin Talk என்னும் ஆங்கிலச்சொல்லின் மருவல். அங்குள்ள கஜபுஜ மொழிக் கதம்பம், சீனம், மலாய், ஆங்கிலம் ஆகியவற்றின் கசபுசாவெல்லாம் சேர்ந்து உருவாகியதுதான் பிட்ஜின் மொழி. அன்றாட வழக்கிற்காக அந்த மொழி உருவாகியது. ஆகவே அதனை Business Talk மொழி என்று அழைத்தார்கள். அது தேய்ந்துபோய் பிட்ஜின் ஆகி, பிசின் ஆகி இப்போது அதிகாரபூர்வ மொழியாகிய Tok Pisin ஆகத் திகழ்கிறது.
இது ஒரு தினுசான Linguistic Evolutionதான்.
இன்னும் பத்து இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ் மொழி எப்படி இருக்கும்?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday, 19 June 2011

SWORD OF SHIVAJI


பவானி தேவி தந்த சிவாஜி வாள்


இந்தியாவிலிருந்து வெளிநாட்டுக்குக் கொண்டுபோகப்பட்ட அரிய பொருள்கள் அனேகம். கணக்கில் அடங்கமாட்டா. ஏனெனில் அதையெல்லாம் கணக்கெடுக்கக்கூடிய அளவில் எடுத்துச் செல்லப்படவில்லை. அள்ளிக் கொண்டு சென்றார்கள். எத்தனையோ யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் தூக்கிச்சென்றிருக்கின்றன!
சாதாரணமாக மக்களுக்குத் தெரிவது கோகினூர் வைரமும் மயிலாசனமும்தான்.
இப்போது வெளிநாட்டில் இருக்கும் பொருள்களின் பட்டியலே மிகப் பெரிய பட்டியல்.
அதில் சிவாஜியின் வாளும் இருக்கிறது.

சிவாஜி ஒரு சாக்தர். தாந்திரீக வழிபாட்டில் அவருக்கு ஈடுபாடு இருந்திருக்கிறது. அவருக்கு இரண்டு முறை முடிசூட்டும் வைபவம் நடந்தது. அதில் ஒன்று தாந்திரீக முறையில் நடந்தது.

ஆஞ்சநேய உபாசகராகிய ஸ்மார்த்த ராமதாசர் அவருடைய குரு.


ஸ்மார்த்த ராமதாசர் எப்படி ஆஞ்சநேயரை உபசனா மூர்த்தியாக வசப்படுத்திக்கொண்டார் என்பது ஒரு ரசமான வரலாறு.
சிவாஜி அம்பாள் பவானியின் வழிபாட்டைச் சிறப்பாகச் செய்துவந்தார்.
முகலாயரை அடக்குவதற்காக அவருக்கு பவானி அம்பாள் ஒரு வாளைத் தந்திருக்கிறாள்.அந்த வாள் சிவாஜிக்கு மனோதைரியத்தையும் மன உறுதியையும் தொடர்ந்த வெற்றிகளையும் கடைசிவரைக்கும் கொடுத்துவந்தது.


சிவாஜிக்குப் பிறகு அவருடைய வாரிசுகளான பான்ஸ்லே மன்னர்கள் வலுக்குறைந்து போய் பெயரளவில் ஆண்டுவந்தனர்.
உண்மையான அதிகாரமும் பலமும் பேஷ்வா எனப்படும் அமைச்சர்/தளபதி/தனாதிகாரி/கவர்னர் ஆகிய பதவிகளின் கூட்டைக் கையில் வைத்திருந்த ஆட்களிடம்தான் இருந்தது.
அத்துடன் படைபலம் வைத்திருந்த ஆளுனர்கள், படைத்தலவர்கள் முதலியோரிடமும் இருந்தது. ஸிந்தியா, ஹோல்க்கார், கெய்க்வாட் போன்றோர் இந்த வட்டத்தில் அடங்குவர். இன்னும் பல நூற்றுக்கணக்கான மராத்தியர்கள் ஆங்காங்கு ஊர்களையும் பிரதேசங்களையும் கைப்பற்றிக்கொண்டு ஆண்டுவந்தனர்.
பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டபோது நூற்றுக்கும் மேற்பட்ட மராத்திய சமஸ்தானங்கள் இருந்தன. இன்னும் ஜமீன்கள் வேறு. பதினெட்டாம் நூற்றாண்டில் இவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். அது படிப்படியாகக் குறைந்துவிட்டது. 1857-இல் வெகுவாகக் குறைக்கப் பட்டுவிட்டது.
ஜான்ஸி போன்ற நாடுகள் பிரிட்டிஷாரால் பிடுங்கிக்கொள்ளப்பட்டு விட்டன.
இந்தப் பானிப்பட்டும் ஈஸ்ட் இண்டியா கம்பெனியும் மட்டுமில்லை யென்றால் நாமெல்லாம் கீற்றுநாமத்தைப் போட்டுக் கொண்டு மராத்தி பாஷையைப் பேசிக்கொண்டிருப்போம்.
பான்ஸ்லேக்களின் ஆட்சியில் சத்தாரா நாடு இருந்தது. இரண்டு மூன்று தலைமுறைகள் கழித்து சத்தாராவிலிருந்து கோல்ஹாப்பூர் பிரிந்துவிட்டது. அதையும் பான்ஸ்லேக்களின் ஒரு கிளையினர் ஆண்டனர்.


கோல்ஹாப்பூர் ராஜா வசம் சிவாஜியின் வாள் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் அந்த வம்சத்தைச் சேர்ந்த ஓர் அரசர் அதனை 'மொட்டைத்தலை மவராசா' என்று அன்பாகக் குறிப்பிடப்படும் ஏழாம் எட்வர்டு சக்கரவர்த்திக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டார்.
அம்பாள் பவானி கொடுத்த கத்தி அது!
என்ன பிரமாதம்! அம்பாள் பவானியே அம்புட்டிருந்தால் அந்த ராஜா அவளையும்கூட அன்பளிப்பாக லண்டனுக்கு அனுப்பியிருப்பான், அந்த தோஸ்த்தி லண்டன்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, 17 June 2011

THE EIGHT-ARMED WONDER


எண்தோள் வீசி நின்ற அற்புதன்


    அப்பர் பெருமான் திருவங்கமாலை என்னும் பாடலைப் பாடியுள்ளார். இந்தக் காலத்திலெல்லாம் இந்த மாதிரியான பாடல்கள் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போய்விட்டன.
    கோயில்களில்கூட யாராவது இந்தக் காலப் பாடகர்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப உருக்கமாகக் குரலை வைத்துக்கொண்டு தழுதழுக்கப் பாடிய பாடல்கள், அல்லது டபுக்குடப்பான் டப்பான் டப்பான் என்று தாளம் 
போட்டுக் கொண்டு பாடும் 'சாமிப் பாடல்கள்', அல்லது "காளியம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆஆ ஆஆஆ"....." என்று டண்டனக்கா டணக்குனக்கா என்று உடுக்கு, பம்பை, உருமி, தவில் முதலியவற்றை இடித்து...... ஓ... திருத்தம் திருத்தம் - அடித்து ..... அந்த நிசும்பசூதினியையே திடுக்கிடவைக்கும் பாடல்களைத்தாம் போடுகிறார்கள்.
     இல்லையென்றால் பாம்பே 
சகோதரிகள் பாடிய பாடல்கள்.


    யார் இந்த திருவங்க மாலை, திருநீற்றுத் திருப்பதிகம், கோளறு திருப்பதிக மெல்லாம் பாடுகிறார்கள்?


    "யோவ்..... ரொம்ப இழுக்காதய்யா.... நேரமாயிக்கிட்டு போஹ¤தில்ல? தங்கம்,செல்லமே எல்லாம் போயிறப் போஹ¤து. அந்த ராதிகா புருசனோட கழுத்துல அருவால வெக்கிற எடத்துல விட்டிருக்காம்யா?..... ராதாரவிமேல பழி போடப் பாக்குறா பாவிப் பொம்பள.... வேகமா வேகமா....", என்று கோயில் தலைவர் தேவாரம் பாட வந்த ஆசாமியைப் பார்த்துச் சொல்வார்.

திருவங்க மாலை என்றால் என்னமோ ஏதோ என்று நினைத்துவிடாதீர்கள்.

"தலையே நீ வணங்காய்.....
தலை மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேறும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்"


    இதன் இரண்டாம் அடியை ஒரு முறைப் பாடியபோது......


"கண்காள் காண்மின்களோ
கடல் நஞ்சுண்ட கண்டன் தனை
எண்டோள் வீசி நின்றாடும் பிரான் தனைக்
கண்காள் காண்மின்களோ"

"எண்டோள்'னா என்னங்க?" என்று ஒருவர் தனியாகக் கேட்டார்.
"எட்டுத் தோள்கள். அதாவது எட்டுக் கைகளை வீசி ஆடுவது"
"சிவனுக்கு எப்பவும் நாலு கைதானே இருக்கு. எட்டுக் கை ஏது?"
"இருக்கு....... மாணிக்கவாசகர்கூட பாடியிருக்கார் இல்லையா......?

"அன்றே என்றன் ஆவியுடன் உடலும் உடமை எல்லாமும்
குன்றே அணையாய், என்னை ஆட் கொண்ட போதே கொண்டிலையோ?
இன்றோர் இடையூறு எனக்குண்டோ, எண்டோள் முக்கண் எம்மானே?
நன்றே செய்வாய், பிழை செய்வாய்.... நானோ இதற்கு நாயகமே?"

     அந்த எண்டோள் கொண்ட எம்மானை மேலே உள்ள படத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.
    இந்த சிலைக்குத் 'திரிபுர சம்மார மூர்த்தி' என்று பெயர்.  
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$Thursday, 16 June 2011

ஓர் ஓநாயின் கதை

ஓர் ஓநாயின் கதை

      Frederic Forsythe பற்றி எழுதிக்கொண்டிருந்தேன். 
அவர் எழுதிய கதைகளிற் சில, படங்களாக வந்துள்ளன. Day Of The Jackal, Odessa File, Dogs Of War ஆகியவை நினைவுக்கு வருகின்றன. ஜாக்கால் கதையின் தொடர்ச்சி கூட வந்தது. ப்ரூஸ் வில்லிஸ் நடித்த படம். அதன் ஒரிஜினலில் ஜாக்கால் பாத்திரத்தில் Edward Fox நடித்திருப்பார். காந்தி படத்தில் ஜாலியன் வாலா பாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டையராக நடித்த அதே ஆசாமிதான்.


'The Afgan' புத்தகத்துக்கு முன்னர் 'The Veteran' என்னும் புத்தகத்தை எழுதியிருக்கிறார். அது நான்கு குறுநாவல்களைக் கொண்டது. இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் உள்ளன.


·பார்ஸித் எழுதியவற்றில் மிகச் சிறந்ததாகச் சொல்லப்படுவது ஜாக்கால் கதைதான். அதை ஒட்டி ஒடெஸ்ஸா ·பைல் வரும்.


இரண்டு நூற்றாண்டுகளாகக் கஷ்டப்பட்டு  உலகத்தின் முக்கிய பகுதிகளில் பல காலனிகளை ·பிரான்ஸ் பிடித்து, சேர்த்து வைத்து ஆண்டுகொண்டிருந்தது. 
பல ஆ·ப்ரிக்க நாடுகள், இந்தோசீனா, க்யானா, மொரோக்கோ, அல்ஜீரியா என்று இங்கும் அங்குமாக இருந்தன.
இரண்டாம் உலக யுத்த முடிவில் காலனித்துவ எதிர்ப்பு உலகெங்கும் ஓங்கியது. 
இந்தோச்சீனாவை உலக யுத்தத்தின்போது ஜப்பானியர் கைப்பற்றி யிருந்தனர். ஜப்பான் தோல்வியுற்ற பின்னர் இந்தோச்சீனாவை ·பிரான்ஸ் மீண்டும் தன் ஆட்சிக்குள் கொண்டுவர முற்பட்டது. 
ஆனால் ஹோச்சீமின் என்னும் வியட்நாமியப் பொதுவுடைமைத் தலைவரின் படைகளுடன் டியென் பியென் பூஹ் என்னும் இடத்தில் ஏற்பட்ட போரில் ·பிரான்ஸ் படுதோல்வியுற்றது. 
·பிரான்ஸ் அந்த வாக்கில் இந்தோசீனாவைக் கைவிட்டுவிட்டு வெளியேறியது. 
இந்தப் போரில் முக்கிய பங்கெற்ற படைப் பிரிவு French Foreign Legion என்பது. 
·பிரெஞ்சுக்காரர் அல்லாத பிற நாட்டினர்கள் சேர்ந்த படைப் பிரிவு அது. 
அதில் சேர்பவர்களின் விபரங்கள் அதிரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். ஆகவே எங்கெங்கிருந்தோ ஓடி வந்தவர்களெல்லாம் ·பாரின் லீஜனில் இருந்தனர். பிடிபடாத நாட்ஸி ஜெர்மானியர் பலர் இருந்தனர். அவர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு வழங்கி நல்ல வருமானத்தையும் கொடுத்து ·பிரான்ஸ் வைத்திருந்தது. பயங்கரக் குற்றவாளிகள், முரடர்கள், கொலைவெறியர்கள் 
போன்றோரெல்லாம் இருந்தனர். ஆனால் அதைவிட கடுமையான கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் லீஜன் படையில் இருந்தன. ஆகவே லீஜனில் ஒழுங்கும் கட்டுப்பாடும் அதிகம். போர் என்று வந்தால் மிகக் கடுமையாகப் போரிடுவார்கள். ·பாரின் லீஜன் அதன் பயங்கரத்துக்குப் பேர் போனதாக விளங்கியது. 
எப்போதுமே வெற்றி பெற்று வந்த படை அது. 
அப்பேற்பட்ட படையை வியட்நாமியர்கள் தோற்கடித்தனர். 
இந்தோச்சீனாவைத் தொடர்ந்து வட ஆ·ப்ரிக்காவில் உள்ள அரபு நாடாகிய அல்ஜீரியாவில் புரட்சி ஏற்பட்டது. அல்ஜீரிய விடுதலைப் படையுடன் ஏற்பட்ட போர்களில் ·பிரான்ஸ¤க்கு அதிக சேதம். 
அல்ஜீரியாவும் டூனீஸியாவும் மொரோக்கோவும் மத்திய தரைக் கடலில் ·பிரான்ஸ¤க்கு எதிர்க்கரையில் இருந்தன. அவற்றின் கடற்கரை ஓரப் பிரதேசங்கள். வெப்பம் அதிகம் இல்லாமல் நன்றாக வளமாக இருந்தன.  தென் ·பிரான்ஸின் சீதோஷ்ண நிலையை அனுசரித்து இருந்தன. 
ஆகவே அந்த இடங்களில் ·பிரெஞ்சுக்காரர்கள் ஏராளமாகக் குடியேறி யிருந்தனர். திராட்சைத் தோட்டம் அது இது என்று தடபுடலாக வாழ்ந்து வந்தனர். 
அல்ஜீரியாவை விட்டு ·பிரான்ஸ் அகன்றுவிட்டால் அங்கிருந்த ·பிரெஞ்சுக் காரர்கள் பாடு அதோகதிதான். 
ஆகவே அவர்களும் படையைத் திரட்டிக்கொண்டு அரபுகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர். 
·பிரான்ஸின் தீவிர வலதுசாரிகள் இவர்களை ஆதரித்தனர். 
ஆளாளுக்கு கெரில்லாப் போர்களைப் புரிந்துகொண்டிருந்தனர்.
·பிரான்ஸின் நிலைமை நாளுக்கு நாள் படுமோசமாகிக் கொண்டிருந்தது. 
·பிரான்ஸின் அரசு அடிக்கடி மாறிக் கொண்டிருந்தது. அதன் நாணய மதிப்பும் குறைந்து பொருளாதார வீழ்ச்சியும் ஏற்பட்டது. அடிக்கடி அரசுகள் கவிழ்ந்துகொண்டேயிருந்தன.
அப்போது சார்ல்ஸ் தெ கால் Charles de Gaulle என்னும் மாஜி தளபதி ஆட்சியைக் கைப்பற்றினார். 


இரண்டாம் உலகப்போரில் பிரிட்டனிலிருந்து ·பிரெஞ்சுப் படையைத் திரட்டிக்கொண்டு ·பிரான்ஸில் இருந்த ஜெர்மானியருடன் போரிட்டவர். பாரிஸை விடுவித்தவர்.
உலக யுத்த முடிவில் எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கிக்கொண்டவர். 
·பிரான்ஸை மீண்டும் காப்பாற்றவேண்டி அவர் ஆட்சியைப் பிடித்துக் கொண்டார். 
·பிரான்ஸை நிலைநிறுத்துவதற்கு இருந்த வழி, அதனுடைய காலனிகளுக்கு சுதந்திரம் கொடுப்பதுதான். 
அந்த நாடுகள் விரும்பினால் ·பிரான்ஸ் நாட்டின் மாநிலமாக விளங்கலாம். கடலுக்கு அப்பாலுள்ள மாநிலங்கள் என்ற விசேஷப் பிரிவில் பல குட்டிநாடுகள் வந்தன. 
இருப்பனவற்றில் அல்ஜீரியாவே சிக்கல் மிகுந்ததாக இருந்தது. ஏனெனில் அதைத் தாய்நாடாகக் கொண்டிருந்த ·பிரெஞ்சுக்காரர்கள் லட்சக்கணக்கில் அங்கிருந்தனர். அவர்களோ சுதந்திரத்தை வெறுத்தனர். 
தே கால் வரிசையாக எல்லாக் காலனிகளையும் விடுவிக்க ஆரம்பித்தார். 
அல்ஜீரியாவுக்கும் சுதந்திரம் கொடுக்க ஏற்பாடு செய்தார். 
இதை நிறுத்தவேண்டுமானால் ஒரே வழிதான். 
தே காலைப் போட்டுத் தள்ளுவது. 
மலேசியத் தமிழ் கலாச்சாரப்படி "தூக்குங்கடா அவன!".
தே காலைத் தூக்குவதற்குப் பெரும்பணத்தை எப்படியோ திரட்டி ஒரு கொலையாளியை ஏற்பாடு செய்து வலச்சாரியினர் அனுப்பினர். 
அந்த ரகசியக் கொலையாளியின் பெயர் யாருக்கும் தெரியாது. 
Chakal என்ற பெயரால் அவன் விளங்கினான். ஆங்கிலத்தில் Jackal. அதாவது ஓநாய்.
தெ காலைக் கொலை செய்ய ஜாக்கால் செய்த முயற்சி, போட்ட திட்டம், அதை ஸ்பெஷல் டிட்டெக்டிவ் ஒருவர் முறியடித்து அவனைக் கொன்றது.....
இதுதான் Day Of The Jackal கதை.
புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்கமுடியாது. அத்தகையதொரு விறுவிறுப்பும் ஓட்டமும் கொண்ட கதை!


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

MADARASA PATTANAM

மதராசாப் பட்டனம்


சிலநாட்களுக்கு முன்னர் மதராஸ் எனப்பட்ட சென்னப்பட்டினத்தின் பிறந்த நாள்.
அதை முன்னிட்டு சென்னையில் பிரிட்டிஷ் கோட்டை ஏற்பட்ட கதையை போடுகிறேன்.
படித்துப்பாருங்கள்..........


பிரிட்டிஷ்காரர்கள் தமிழ்நாட்டுக்கு வந்ததைப் பற்றி ஒரு பழைய அம்மானை இருந்தது.
'அம்மானை' என்பது தமிழில் உள்ள தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளில் ஒன்று. பழமையானது. மாணிக்கவாசகரே இதைக் கையாண்டிருக்கிறார் என்று பார்த்துக்கொள்ளுங்களேன்.


அதில் பிரிட்டிஷ்காரர்கள் எப்படி தமிழ்நாட்டுக்கு வந்து கடை விரித்தனர் என்றதைப் பற்றி ஒரு வேடிக்கையான விபரம் இருக்கிறது.
தற்கால ஆங்கில இலக்கிய மரபில் Spoof அல்லது Farce எனப்படும் நையாண்டி இலக்கிய மரபு ஒன்று உண்டு. இந்த வகையைச் சேர்ந்த சினிமா ப்படங்கள் இப்போது வந்துள்ளன.
அம்மானையில் உள்ள வேடிக்கையான விபரங்களை நானே ஸ்பூ·ப்  செய்து போட்டிருக்கிறேன். 
பிரிட்டிஷ்காரர்கள் சிவப்புக் கோட்டுப் போட்டுக்கொண்டு வந்தார்களாம். வந்தவர்கள் சென்னையின் அருகில் இறங்கினார்கள். அங்கிருந்த மன்னர் ஒருவரை வந்து பார்த்து வணங்கினர்.
அந்த மன்னன் "என்னென்ன வேண்டும் என்று கேட்டதற்கு, அவர்கள்,
"நாங்கள் வர்த்தகம் செய்ய ஒரு சிறு இடம் வேண்டும்," என்று கேட்டனர்.
இடம் தர மறுத்த மன்னனிடம், "நீங்கள் அதிகம் இடம் தரவேண்டாம். எங்களிடம் உள்ள ஆட்டுத்தோல் அளவு பரப்புடைய இடம் மட்டும் தந்தால் போதும்", என்றார்கள்.
"சரிதான். சரியான மாங்கா மடையங்க்ய போல்ருக்கு", என்று மன்னனும் தளவாய் பிரதானிகளும் நினைத்துக்கொண்டு அனுமதி கொடுத்தனர்.
"கடல்கரையோரத்தில் நாங்கள் இடம் பார்த்துக்கொள்கிறோம். கடற்கரை யெல்லாம் மணல்தானே. உங்களுக்குப் பயனில்லாத இடம். அதையே நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்", என்றனர்.
ரொம்பச் சந்தோஷத்தோடு மன்னன் அனுமதி கொடுத்துவிட்டான்.


பிரிட்டிஷ்காரர்கள் கடற்கரைக்குச் சென்றனர். அங்கு ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, சுருட்டி வைக்கப்பட்டிருந்த ஆட்டுத்தோலை அதன் மீது வைத்தனர்.
பின்னர் அதனை அவிழ்த்து நீட்டிப் பிடித்து இழுத்து விரித்தனர்.
அதுபாட்டுக்கு விரிந்துகொண்டே சென்றது.
முடிவில் மூன்று மைல் நீளமும் இரண்டு மைல் அகலமும் கொண்ட விரிப்பாகப் பரந்து  விளங்கியது.


ராஜாவிடம் அந்த இடத்தைக் காட்டிவிட்டனர்.
ராஜாவிடம், "இங்கு நாங்கள் சாமான்களை வரவழைத்து வைத்துக்கொள்ள கூடாங்கு கட்டிக்கொள்கிறோம்", என்றனர்.
"சரிதான்", என்று ராசா தலையசைத்துவிட்டு அந்தப் புறமாகச் சென்றார்.
பிரிட்டிஷ்காரர்கள் கூடாங்கு கட்டிக்கொண்டனர்.
பின்னர் ராசாவிடம் சென்று, "ஓ ராசாவே! உங்கள் நாட்டில் திருட்டுப் பயம் அதிகம். ஆகவே எங்கள் கூடாங்கைப் பாதுகாக்கச் சுவர் கட்டிக்கொள்கிறோம்", என்றனர்.
"சரிதான்" என்று சொல்லிவிட்டு ராசா அந்தப்புரம் சென்றார்.


இவர்கள் இந்தப் புறத்தில் பெரிய சுவர்களைக் கட்டிக்கொண்டனர்.
சுற்றிலும் அகழி. அரண்கள். உள்ளுக்குள் என்னவிருக்கிறது என்பதுகூட தெரியாத அளவுக்குப் பக்காவாக இருந்தது.
"ஓ ராசா! எங்கள் வர்த்தகத்தை நாங்கள் பல இடங்களில் செய்வதற்கு எங்களுக்குப் போதிய பாதுகாப்பு வேண்டும். ஆகவே நாங்கள் சோஸர்கள் வைத்துக்கொள்கிறோம்", என்று சொல்லி அனுமதி வாங்கிக்கொண்டனர்.
சோஸர்கள் எனப்படும் Soldier போர்வீரர்கள் ஏராளமாக வந்து சேர்ந்தனர்.
அவர்களுடன் ஆயுதங்கள் எக்கச்சக்கமாக வந்திறங்கின.
பேய்வாய்ப் பீரங்கிகளும் வந்துசேர்ந்தன.


(இதுவரைக்கும் அந்த அம்மானையில் காணப்படும். அதன் பின்னர் சம்பந்தப் பட்ட போரைப் பற்றி அந்த அம்மானை பேசும்).


இதற்குமேல் நடந்தது........?
மேலே படியுங்கள்.
இதன் நடுவே அந்த நாட்டில் பலவகையான குழப்பங்கள் ஏற்பட்டன.
நவாபு என்னும் ராசா ஆட்சிக்கு வந்தான்.
பிரிட்டிஷ்காரர்கள் நவாபிடம் வந்து, "ஐயா நவாபு. உங்க நாட்டில் கலகம் மிகுந்துவிட்டது. உங்களால் ஈடு கொடுக்கமுடியவில்லை. நாங்கள் உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறோம். நாங்களே உங்களுக்கு கிஸ்தி வசூல் செய்துகொடுக்கிறோம். எங்கள் கோட்டைக்குப் பக்கத்திலேயே அழகான அரண்மனையையும் கட்டிக்கொடுக்கிறோம். நீங்கள் பாட்டுக்கு வசதியாக இருங்கள்", என்றார்கள்.
நவாபும் அதே மாதிரி ஒத்துக்கொண்டான். அந்த அரண்மனையில் சொகுசாக  இருந்துகொண்டு நன்றாகச் செலவழித்துக்கொண்டிருந்தான்.
"ஐயா நவாபு. நீங்கள்தான் இந்நாட்டு மன்னர். எல்லாரும் பார்த்து வியக்கும் வண்ணம் உங்கள் தர்பார் நன்றாக இருக்கவேண்டும். பணத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலையே படவேண்டாம். நாங்கள் தருகிறோம். கொஞ்சம் வட்டி மட்டும் போட்டுக்கொள்கிறோம்", என்றனர்.
"ஆஹா! ஆஹா!" என்று நவாபு சந்தோஷப்பட்டான்.
சில ஆண்டுகள் கழித்துக் கடனுக்குமேல் கடனாக பேட்டைரேப்பில் வடிவேலு சொன்னமாதிரி நவாபுக்கு ஆகிவிட்டது.
"அதனால் என்ன நவாபு! நீங்க கவலையே படாதீங்க. பணம் நாங்க இன்னும் தருகிறோம். நீங்க சில பிரதேசங்களை எங்களுக்குக் கொடுத்துவிடுங்கள். இன்னின்ன சலுகைகள் வேண்டும். அவற்றையும் கொடுத்துவிடுங்கள்", என்று சொல்லி வாங்கிக்கொண்டனர்.


"அச்சா! அச்சா! பஹ¥த் அச்சா" என்று நவாபும் சம்மதித்தான். பிரிட்டிஷ் காரர்களிடம் கிஸ்தி செலுத்துவதில் சில பாளையக்காரர்களுக்கு இஷ்டமில்லை. ஆகவே கொடுக்கவில்லை. கலகமும் செய்தனர்.


"அரே நவாப் ஸாப்! நிம்பள் பாலேகார் தக்றார் அட்க்கூறான் இல்லே. நிம்பள் படேக்கி பெலம் இல்லே. சண்டே நல்லா குட்க்குறான் இல்லே. நிம்பள் படேய நம்பள்க்கி நிம்பள் குட்க்றான். நாம்பல் சண்டே போட்றான். பாலேகார் பத்மாஷ்களே அட்க்கூறான்", என்றனர்.


பிரிட்டிஷ்காரர்கள் நவாபின் படைகளையும் தாங்களே எடுத்துக்கொண்டு தங்கள் படைகளையும் சேர்த்துக்கொண்டு கலகக்கார பாளையக் காரர்களுடன் போருக்குச் சென்றனர்.
நவாபின் படையினர் சம்பளம் சாடிக்கை, பிரிட்டிஷ் துருப்புகளின் செலவு
 எல்லாவற்றுக்குமாக நவாபுக்கு பில் அனுப்பினர்.
கலகம் உள்நாட்டுப் புரட்சியாகவும் போராகவும் மாறியது.


நவாபிடம் பிரிட்டிஷ்காரர்கள், "இந்த சிட்டுவேஷனைச் சமாளிக்க எங்களுக்கு அதிகமான அதிகாரங்கள் வேண்டும். இன்னும் அதிகமாகப் பணமும் வேண்டும். பணிந்துபோன பாளையக்காரர்களெல்லாம் பயனடைய வேண்டும். ஆகவே எங்களிடம் எல்லா அதிகாரங்களையும்  ஒப்படையுங்கள்", என்று அதட்டலாகக் கேட்டு வாங்கிக்கொண்டனர்.


அதன் பின்னர் பாளையக்காரர்களையெல்லாம் அடக்கிவிட்டனர்.
தங்களுடைய அதிகாரத்தை நிறுவிக்கொண்டனர்.


அப்போது கடன்கார நவாபு செத்துப்போய் அவனுடைய மகன் பட்டத்துக்கு வந்துவிட்டார். பாவம். இந்துஸ்தானிக்காரராக இருந்தாலும்கூட நல்ல தமிழ் அறிஞர். புலவர். கடனும் சமாளிக்க முடியாத அளவுக்குப் போய்விட்டிருந்தது.


பிரிட்டிஷ்காரர்கள் அவரிடம், "இந்த பாளையக்காரப் பசங்களெல்லாம் இப்ப அடங்கிப் போயிட்டாங்க்ய. ஆனா எப்ப என்ன செய்வானுவனுட்டு ஒண்ணும் சொல்றதுக்கில்ல. ஆகையினால நீங்க இன்னா செய்றீங்கோ தெரியும்? பேசாம எங்ககிட்ட நாட்டை ஒப்படைச்சுருங்க. அல்லாத்தயும் நாங்க பாத்துக்கினு கீறோம். நாங்க வர்சாவர்சம் பென்சனு தர்ரோம். நீ சொம்மா குந்திக்கினு நாஸ்டா சாப்டு, நயினா. அக்காங்!" என்று சொன்னார்கள்.


சென்னையில் பல காலமாக இருந்துவிட்டனரா. ஆகவே இந்த நாட்டுக்கு வரும்போது இங்கிலாந்திலேயே 'டீச் யுவர்ஸெல்·ப் டேமில்', 'டேமில் ஸெல்·ப்டாட்' போன்ற புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டு, ஒழுங்காகத் தமிழ்  பேசிக்கொண்டிருந்தவர்கள் நாளடைவில் சேட்ஜி பாஷையிலும் மெட்ராஸ் பாஷையிலுமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
நவாபும் அவ்வாறே செய்தார்.
கொஞ்சநாட்கள் கழித்து கோட்டையை அடுத்திருந்த அரண்மனையையும் கொடுத்துவிட்டு வேற்றிடம் சென்றுவிட்டார்.
இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடுங்குற கதையாகவல்லவா இருக்கிறது!
அடடே! நான் பழமொழியைத்தான் சொன்னேன்.
எல்லாமே ஓர் ஆட்டுத்தோலால் வந்தது.


$$$$$$$$$$$$$$$$$

Tuesday, 14 June 2011

நல்லதும் கெட்டதும் தீயதும்


நல்லதும் கெட்டதும் தீயதும்

"அரிய சாதனைகளைச் செய்துவிட்டு கெட்ட பேர் வாங்கியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள் என்றதும் முதலில் ஞாபகத்துக்கு வருகிறவர்கள் ஜெனரல் பேட்டன், ஜெனரல் மெக்கார்தர், ·பீல்ட் மார்ஷல் ரோம்மெல், ஹேரி ட்ரூமன், வின்ஸ்டன் சர்ச்சில் முதலியோர். 
செய்யவேண்டிய கந்தரகோலத்தையெல்லாம் செய்து விட்டு நல்ல பேர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள் - கென்னடிபோல. அந்தக் கந்தர கோலத்தால் கெட்டபேர் வாங்கிக் கட்டிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள் - நிக்ஸனைப் போல.


இது ஒரு புதுமையான டாப்பிக்.
உள்ளுக்குள் சென்றுதான் பார்ப்போமே?" 
இது ஒரு Intriguing subject. முடிந்தவர்கள் அந்தச் சொற்களைத் தமிழாக்கம் செய்து கொள்ளுங்கள்.
ஜெனரல் ஜார்ஜ் பேட்டன்(George Patton) என்பவர் யூஎஸ்ஸின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த தளபதிகளில் ஒருவர்.
வட ஆ·ப்ரிக்காவில் ஜெர்மன் தளபதி ஃபீல்ட் மார்ஷல் எர்வின் ரோம்மெல்லிடம்(Erwin Rommel) தோற்றுக் கொண்டிருந்த ஆங்கிலோ அமெரிக்கப் படைகளை வெற்றி யடையச் செய்தவர். 
        சிசிலித் தீவிலும் அமெரிக்கர்களைப் பெரிய வெற்றியை அடையச்செய்தவர். அதன் தலைநகரமாகிய மெஸினாவை ஆங்கிலத் தளபதி மாண்ட்கோமரியையும் முந்திக்கொண்டு கைப்பற்றியவர். 
அதன் பிறகு 1944-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6-ஆம் தேதி, ஆப்பரேஷன் ஓவர்லார்ட் என்னும் பெரிய படையெடுப்பு நாட்ஸி ஜெர்மனியின் ஆட்சியில் இருந்த ஐரோப்பாவின்மீது நிகழ்ந்தது. 
இங்கிலாந்திலிருந்து ஆங்கிலோ-அமெரிக்க-கனேடிய-·பிரெஞ்ச்சுப் படைகள் 5000 கப்பல்களின் மூலம் நாட்ஸி ஜெர்மனியின் கையில் இருந்த ·பிரான்ஸில் கரையிறங்கின. 
ஆனால் அந்தப் படையெடுப்பில் பேட்டன் இல்லை. ஒரு போலியான படைக்குத் தலைமையேற்று இங்கிலாந்தில் இருத்திக் கொள்ளப்பட்டார். காரணம் சிசிலியில் நடந்ததை வைத்து வெறுப்புற்ற மாண்ட்கோமரி தம்முடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, பேட்டனைப் போரிலிருந்து நீக்கப்படச் செய்தார்.
கரையிறங்கிய ஆங்கிலோ அமெரிக்கப்படைகள் முன்னேறமுடியாமல் தவித்தன. 
       அப்போது பேட்டனை அழைத்து அவரிடம் அமெரிக்க மூன்றாம் படையை ஒப்படைத்துப் போருக்குள் ஈடுபடச் செய்தனர்.  
மிக விரைவில் ஜெர்மன் அரணை உடைத்துக்கொண்டு வெகு வேகமாக பேட்டன் முன்னேறினார். 
முதன்முறையாக லட்சக்கணக்கான ஜெர்மன் போராளிகள் கைதிகளானார்கள். இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்துபோயினர். ஆயிரக்கணக்கானவர்கள் பின்வாங்கி, தப்பிச்சென்றனர். பல்லாயிரக் கணக்கான தளவாடங்களை விட்டுச்சென்றனர். 
விரைவில் பிரான்ஸ் விடுவிக்கப்பட்டது.
ஆனாலும் ஒரு கட்டத்தில் பிரிட்டிஷ்/அமெரிக்கப் படைகள் தோல்வி யடையக் கூடிய நிலையில் இருந்தன. பேட்டன் தம்முடைய திறமையான படை நடத்துதலால் Battle Of The Bulge என்னும் முக்கிய போரில் ஜெர்மானியரைத் தோற்கடித்து, தாம் வெற்றி பெற்று, ஆங்கிலோ- அமெரிக்கப் படையினரைக் காப்பாற்றினார்.
ஜெர்மனியின் எல்லையாக விளங்கிய ரைன் நதியை அவரும் அவருடைய படையினரும் அடைந்தனர். 
மாண்ட்கோமரி பின் தங்கியிருந்தார்.

ஆனால் ஜெர்மனிக்குள் தாமே முதலில் நுழையவேண்டும் என்றும் தாம் நுழைந்த பின்னரே பேட்டன் நுழைய வேண்டும் என்றும் அதுவரைக்கும் பேட்டன் தம்முடைய படையுடன் ரைன் நதிக் கரையிலேயே காத்திருக்க வேண்டும் என்றும் மாண்ட்கோமரி நிபந்தனை போட்டிருந்தார். 
ஆனால் பேட்டன் அதையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ள வில்லை. 
"போடாங்க்க.....", என்று யாருக்காகவும் காத்திராமல் ரைன் நதியைக் கடந்துவிட்டார். 


ஜெர்மானியர்களுக்கு ரைன் நதி ஒரு புனித நதி. 
அந்த நதியைக் கடந்த பேட்டன் முதலில் ஒரு காரியத்தைச் செய்தார்.
தம்முடைய டிரவுசர் பட்டன்களைக் கழற்றி விட்டு ரைன் நதிக்கரையில் நின்றுகொண்டு அந்த நதிக்குள் சிறுநீர் கழித்தார். 
அந்தவகையில் அவர் அந்தப் புனித நதியை அவமதித்து, அதன்மூலம் 
ஜெர்மானியர்களையும் அவமதித்தார்.
அதையே ·போட்டோப் படமாகவும் எடுப்பதற்குப் போஸ் கொடுத்தார்.
அந்தப் படத்தை இங்கே காணலாம் - 
மாண்ட்கோமரிக்குக் கடுங்கோபம். 
பேட்டன் ரைன் நதிக்குள் சிறுநீர் கழித்ததால் அல்ல. 
தமக்கு முன்னால் பேட்டன் செய்துவிட்டாரே என்பதால். 
ஜெர்மனியில் நடந்த போரில் வேறு எந்தப் படையையும்விட பேட்டனின் மூன்றாம் படை மிக அதிகமான பரப்புள்ள பிரதேசங்களைக் கைப்பற்றி, மிக அதிகமான ஜெர்மன் போர்க் கைதிகளையும் பெற்றது. போர்த் திட்டப்படி அவர் கைப்பற்றவேண்டிய இடங்களையும் தாண்டிச் சென்று ரஷ்யர்கள் கைப்பற்றவேண்டிய பிரதேசத்துக்குள்ளும் சென்றுவிட்டார். 


ஆனால் இவ்வளவு இருந்தும் போரின் முடிவில் அவரை மிகவும் கேவலப் படுத்திவிட்டார்கள். மாண்ட்கோமரியும் பீடல் ஸ்மித் என்னும் அமெரிக்கத் தளபதியும்தான் காரணம். 
கடைசியில் பேட்டன் மனம் உடைந்துபோனார்.
விரைவில் இறந்தும் விட்டார். 
ஆனால் மாண்ட்கோமரிக்கு பிரிட்டிஷ்காரர்கள் சிறப்பு ·பீல்ட்மார்ஷல் பட்டமும் கொடுத்து அவரை ஓர் 'எர்ல்' எனப்படும் பிரபுத்துவத்தைக் கொடுத்து கௌரவித்தார்கள்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday, 12 June 2011

BIRTH OF 'THE TAMILS 1800 YEARS AGO'

'ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்'  
நூலின் பிறப்பு


நூறாண்டுகளுக்கு முன்னர் கனகசபைப் பிள்ளை என்றொருவர் இருந்தார். 
அந்தக் காலத்திலேயே சென்னையில் அவர் மேற்படிப்புப் படித்தவர். பி.ஏ. பட்டத்துடன் சட்டத்திலும் பட்டம் பெற்றார். 
அவர் எடுத்துக்கொண்ட முதற் கேஸ் மிகவும் சிக்கலானது, வெல்லமுடியாத கேஸ் என்று மற்றவர்களால் முடிவு செய்யப்பட்ட கேஸ். எதிரணியினர் பக்கம் வலுவான சான்றுகள் 
இருந்திருக்கும் போலும். அவர்கள் பக்கம் நியாயமும் இருந்திருக்க வேண்டும். 

இருப்பினும் கனகசபைப் பிள்ளை தம்முடைய அந்த முதல் கேஸை மிகவும் லாகவமாகக் கையாண்டு தம்முடைய திறமையால் தம் கட்சிக்காரரை வெல்லவைத்தார். 
கோர்ட்டில் இருந்த மட்டுக்கும் அவர் பெருமையினால் பூரித்துப்போயிருந்தார். ஏனெனில் வெல்ல முடியாத கேஸை வென்று காட்டியது ஒரு பெரும் சாதனையல்லவா? 
அதுவும் முதல் கேஸ்!.
கோர்ட்டில் இருந்த வக்கீல்கள் முதல் பலரும் பாராட்டினார்கள். அந்தக் கேஸைப் பார்க்க வந்த கனகசபைப் பிள்ளையின் பழைய வகுப்புத் தோழர்களும் உறவினர்களும் நண்பர்களும் 
உள்ளன்போடு பாராட்டினர்.

கனகசபைப் பிள்ளை பாராட்டுக்களைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு கோர்ட்டை 
விட்டு வெளியில் வந்தார்.

வீடு திரும்புவதற்காக வண்டியில் ஏறப்போனார். 
அப்போது பெரிய ஓலமும் கூக்குரலும் கேட்டது. 
தோற்றுப் போன கட்சிக்காரர்கள் ஓடிவந்து அவரைப் பார்த்து அழுதுகொண்டு, திட்டி 
சாபம் கொடுத்தனர். 

அத்துடன் இல்லை.
மண்ணை வாறித் தூற்றினர்.
அவ்வளவுதான். 
மனது ஒடிந்து போன கனகசபைப் பிள்ளை மீண்டும் கோர்ட் பக்கம் போகவேயில்லை. 
அதுதான் முதல் கேஸ¤ம் கடைசிக் கேஸ¤மாக முடிந்தது. 
தம் தொழிலின்மீதே ஆழ்ந்த வெறுப்புக்கொண்ட பிள்ளையவர்கள் மனச்சாந்திக்காக இன்னொரு பக்கம் திரும்பினர். 
தமிழ்.
பழந்தமிழ்.
பழந்தமிழ் இலக்கியம். 
அப்போதுதான் சங்க இலக்கியங்களும் மற்ற பழந்தமிழ் இலக்கியங்களும் தமிழ்த்தாத்தா  உவேசாமிநாத அய்யரவர்கள், தாமோதரம் பிள்ளையவர்கள் போன்றோரால் உலகத்திற்கு 
வெளிக் கொணரப்பட்டிருந்தன. 

    பாலவநத்தம் பாண்டித்துரைத்தேவர், ராம்நாதபுரம் சேதுபதி மன்னர், ஊற்றுமலை ஜமீன்தார், காசிமடாதிபதி, திருவாவடு துறை மடாதிபதி போன்றோர்
அத்தகைய ஆராய்ச்சிகளுக்குப் பெரிதும் உதவி வந்தனர்.

அந்த இலக்கியங்களில் மூழ்கியதோடு அல்லாமல் மிக ஆழமாக ஆராய்ச்சிகளையும் செய்தார். 
சங்க இலக்கியங்களின் மூலம் ரோம-கிரேக்க நாகரிகங்களுக்கு ஈடாக உள்ள உன்னத நாகரிகம் ஒன்று பண்டைத் தமிழர்களிடையேயும் இருந்தது என்பதை உணர்ந்தார். 
கூலிக்காரத் தமிழர்கள், படிப்பறிவில்லாத தமிழர்கள் என்று ஆங்கிலேயர்களாலும் மற்றவர்களாலும் இளக்காரமாக நினைக்கப் பட்டிருந்த தமிழர்கள் தங்களைப் பற்றி தாங்களே ஒரு தாழ்மை மனப்பான்மையைக் கொண்டிருந்தனர். அறுநூறாண்டுகளாக அடிமைச் சிறுமதியை உச்சத்தில் கொண்டு உழன்றுகொண்டிருந்தார்கள் 
அப்படிப்பட்ட தமிழர்களுக்கும் ஒரு பொற்காலம் இருந்தது என்பதை உலகத்தினருக்கு உணர்த்த விரும்பினார்.
அத்துடன் தமிழர்களுக்கும் தங்களைப் பற்றிய சுயமரியாதை ஏற்படட்டும் என்றும் 
விரும்பினார்.

ஆகவே ஒரு மிகச் சிறந்த நூலை உருவாக்கினார்.
ஆங்கிலத்தில்.
அப்படிப் பிறந்ததுதான்.......

'The Tamils 1800 Years Ago'.

அன்புடன்

ஜெயபாரதி

=============================Saturday, 11 June 2011

ROSETTA STONE

கண்ணெழுத்துக்குச் சாவி - ரோஸெட்டாக் கல்பழங்கால எகிப்தில் வழங்கிய மொழிக்குறியீடுகளை ஹையரோக்லி·பிக்ஸ் என்று அழைக்கிறார்கள். 
தமிழில் மிக மிகப் பழங்காலத்தில் வழங்கியதாகக் கூறப்படும் எழுத்துக்களில் கண்ணெழுத்துக்கள், கோலெழுத்துக்கள், வட்டெழுத்துக்கள், கூட்ட்ழுத்துக்கள், பட எழுத்துக்கள் போன்றவை இருந்ததாகச் சொல்வார்கள்.
இவற்றில் ஏதோ ஒரு வகையாக ஹையரோக்லி·பிக்ஸ் இருந்திருக்கலாம். இந்தத் துறையில் தமிழர்கள் இன்னும் ஆராய்ச்சிகள் செய்ய ஆரம்பிக்கவில்லை.
இதுவரைக்கும் உலகில் வழங்கிய பல மொழிகள் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கள், குறியீடுகள் கணடறியப்பட முடியவில்லை. ஹராப்பா மொழி, அதன் சமகாலத்து க்ரேட்டானிய மொழி, இத்தாலியில் ரோமர்கள் காலத்துக்கும் முற்பட்டு வழங்கப்பட்ட எட்ருஸ்கன் மொழி போன்றவை படித்தறியாத முடியாத நிலையில் இருக்கின்றன. 
இவற்றிற்கெல்லாம் இன்னும் முதுமையான எகிப்திய எழுத்துக்களை மட்டும் படிக்க முடிகிறதே?
அதற்குக் காரணம் ஒரு கல்.
அதனை ரோஸெட்டா கல் என்று அழைக்கிறார்கள்.
அலெக்ஸாண்டிரியா நகருக்கு மிக அண்மையில் உள்ள ரொஸெட்டா என்னும் ஊருக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டதால் அப்பெயர்.
அது அப்படியொன்றும் பெரிய கல் அல்ல. மூன்றே முக்கால் அடி நீளமும் இரண்டே கால் அடி அகலமும் உள்ள சிறிய கல்தான். 
அந்தக் கல்லில் காணப்பட்ட எழுத்துக்களால்தான் அதற்கு அவ்வளவு சிறப்பு. 
மூன்று வகையான எழுத்துக்களில் அந்தக் கல்வெட்டு காணப்பட்டது. 
எகிப்திய பட எழுத்துக்கள், டெமோட்டிக் மொழி, கிரேக்கம் ஆகியவை.

ஹிட்லர் நினைத்ததுமாதிரியே ஒரு காலத்தில் ·பிரான்ஸின் நெப்போலியனும் நினைத்தார். மத்திய கிழக்கைப் பிடித்துவிட்டு, அப்படியே பாரசீகத்தையும் இந்தியாவைக் கைப்பற்றவேண்டும் என்ற எண்ணம். 
ஆனால் நெப்போலியன் எகிப்திலும் ஸீரியாவிலும் மாட்டிக்கொண்டார். 
அவர் எகிப்தில் இருக்கும்போது, அவருடைய படையைச் சேர்ந்த எஞ்சினியர்களில் சிலர், நல்ல ஆய்வு மனப்பான்மை படைத்தவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் நெப்போலியனுடைய வளர்ப்பு மகனாகிய ஷாம்ப்போலியோங் என்னும் பேரறிஞனும் சென்றிருந்தான். 
ஸ்·பிங்க்ஸ் என்னும் நரசிம்மத்தின் சிலையை அனைவரும் அறிவோம் அல்லவா? 
நெப்போலியனுடைய போர்வீரர்களில் சிலர், தங்களுடைய பீரங்கிச்சூட்டின் குறியை சோதித்துப் பார்ப்பதற்காக ஸ்·பிங்க்ஸின் மூக்கைக் குறிபார்த்துச் சுட்டார்கள். 
அவர்களின் குறி தப்பவில்லை. 
ஸ்·பிங்க்ஸின் மூக்குப்போயிற்று. 


நெப்போலியனால் ஏற்பட்ட பல நன்மைகளில் முக்கியமானவை எகிப்திய ஆராய்ச்சியில் நிகழ்ந்த நலமிக்க திருப்புமுனைகள். 
பூஷார்ட் என்னும் எஞ்சினியர்தான் ரோஸெட்டாவில் அந்தக் கல்வெட்டைக் கண்டுபிடித்தார். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பூஷார்ட் அதனை ·பிரான்ஸ¤க்கு அனுப்பிவைத்தார்.
எகிப்திய பட எழுத்துக்கள் நீண்ட காலமாக வழக்கில் இருந்தன. எகிப்திய ·பேரோ மன்னர்களின் பல பரம்பரைகள் ஆண்டு ஓய்ந்த பின்னர், அலெக்ஸாண்டர் அவர்களிடமிருந்து எகிப்தைக் கைப்பற்றினார். அவர் மாஸிடோனியாவிலிருந்து துருக்கி, மத்திய கிழக்கு, பாரசீகம், மத்திய ஆசியா, ஆ·ப்கானிஸ்தானம், பஞ்சாப் ஆகிய நாடுகள் கொண்ட பேரரசை வைத்திருந்தார். ஆனால் முப்பதிரண்டு வயதிலேயே அவர் இறந்துபோனதாலும் அவருக்குப் பிள்ளைகள் இல்லாததாலும் அவருடைய படைத்தலைவர்கள் நால்வர் அந்த பேரரசைத் தங்களுக்குள் பிரித்துக்கொண்டனர். 
அவ்வாறு பிரிக்கப்பட்டதில் டாலமி என்னும் படைத்தலைவரின் பங்காக எகிப்து கிடைத்தது. அவரிலிருந்து தோன்றிய டாலமி என்னும் கிரேக்க மன்னர் வம்சம் எகிப்தை ஆண்டது. அவர்களின் ஆட்சியில் கிரேக்க மொழியும் கிரேக்க கலாசாரமும் எகிப்தில் பரவின. அவற்றுடன் பண்டைய எகிப்திய மொழியும் எழுத்துக்களும் வழங்கின. அந்தப் பரம்பரையின் கடைசி அரசிதான் க்லியோபாட்ரா.  அவளிடமிருந்து ரோமர்கள் எகிப்தைக் கைப்பற்றி தங்களின் நேரடி ஆட்சியில் வைத்துகொண்டனர்.
அவர்கள் காலத்தில் ரோமர்களின் மொழியாகிய லத்தீன், ஆட்சி மொழியாகியது.
கிரேக்கர்களின் காலத்தில் கிரேக்கத்துடன் வழங்கிய எகிப்திய லிபி, ரோமர்களின் காலத்தில் வழக்கிழந்தது. 
ஒரே ஒரு நூற்றாண்டுக் காலத்தில் எகிப்தியம் அறவே மறக்கப்பட்டது. அதன் பின் வாழ்ந்த ரோமர்களுக்கு அது ஒரு மொழி என்பதுகூட தெரியாமலேயே போய்விட்டது.
1801-ஆம் ஆண்டில் சில்வெஸ்டர் சேஸி என்னும் ஆராய்ச்சியாளர் ரோஸெட்டாக் கல்வெட்டின் டெமோட்டிக் எழுத்துக்களில் காணப்பட்ட பெயர்களான அலெக்ஸாண்டர், டாலமி, என்னும் சொற்களைக் கண்டுபிடித்தார். 
அடுத்து, தாமஸ் யங்க் என்னும் பிரிட்டிஷ் பௌதிக விஞ்ஜானியும், ஷாம்ப்போலியோங் ஆகிய இருவரும் எகிப்திய பட எழுத்துக்களை மொழி மாற்றம் செய்து வெற்றி கண்டனர். மூன்று மொழிகளிலும் உள்ள எழுத்துக்களை ஒப்பீடு செய்து அவற்றுக்குரிய ஒலியன்களைக் கண்டறிந்தனர்.
அப்போதுதான் அவை வெறும் படக்குறியீடுகள் இல்லை என்பதுவும் அதுவும் ஒரு மாத்ருகா நெடுங்கணக்குப் போன்றதைக் கொண்ட லிபி என்பதையும் அவர்கள் நிறுவினார்கள். 
இதற்கான  ஆய்வுகளை மேற்கொண்டுசெய்யும்போது ஒரு கல் தூணில் 'க்லியோப்பாட்ரா' என்னும் பெயரை கிரேக்கம், எகிப்தியம் ஆகிய இரு லிபிகளிலும் கண்டனர். அதன்மூலமும் அந்த லிபியின் குறியீடுகளுக்கு உரிய ஒலியன்களைக் கண்டறிந்துகொண்டனர்.
யங்கின் ஆய்வுகளையும் சேர்த்துக்கொண்டு, ஷாம்ப்போலியோங் இருபத்தாறு எழுத்துக்களைக்கொண்ட ஒரு எகிப்திய நெடுங்கணக்கைச் சேகரித்தார். 
கெனோப்பஸ் ஆணை என்னும் இன்னொரு கல்வெட்டின் மூலம் இந்த எழுத்துக்களின் ஒலியன்களை நன்கு உறுதிப்படுத்திக் கொண்டனர். கெனோப்பஸ் ஆணைக் கல்வெட்டிலும் மூன்று மொழிகளின் லிபியில் ஒரே செய்தி முழுமையாக எழுதப்பட்டிருந்தது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$