Sunday 29 May 2011

வெள்ளிப் பாடல்கள்

வெள்ளிப் பாடல்கள்

வெள்ளியம்பலத் தம்பிரான் என்று ஒருவர் இருந்தார். அவர் ஒரு பெரிய தமிழறிஞர். பல நூல்களை ஆய்வு செய்து, உரைகளை இயற்றி, பாடம் சொன்னவர். 

பல பண்டைய நூல்களைப் படித்துப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கு ஓர் உணர்வு ஏற்படும்.  நூலின் சில இடங்களில் அந்த குறிப்பிட்ட இலக்கியநூலின் கர்த்தா  விளக்கமாக சொல்லியிருக்கமாட்டார். அல்லது பொருள் மயக்கம் ஏற்படும். அல்லது ஏதோ குறைவது போலவும் , சுருக்கமாக இருப்பது போலவும் தோன்றும்.
சிலநூல்களில் சில இடங்களில் அவ்வாறு குறைவு இருப்பதுபோல் தம்பிரானுக்குத் தோன்றினால், அந்தந்த  இடங்களில் , அந்த நூல் பாடிய புலவரின் நடையில் அவராகவே அதிகப் பாடல்களைப் பாடி, இடைச்செருகலாகச் சேர்த்துவிடுவார்.
அந்தப் பாடல்களையும் சேர்த்துப் படிக்கும்போது சுருக்கம் நீங்கி, விரிவும் விளக்கமும் ஏற்படும். 
ஆனால் பல சமயங்களில் தம்பிரானின் சொந்தக்கருத்துக்கள் அந்த இடத்தில் வந்து விழுந்துவிடும். ஒரிஜினல் புலவரின் நடையில் வேறொருவர் பாட முயற்சி செய்த பாடல் என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தும் பாடல்களும் இருக்கும். சில பாடல்கள் அப்பட்டமாகத்
தங்களைக் காட்டிக் கொடுத்துவிடும். 
ஆழ்ந்த நூல் புலமை உடையவர்கள், படித்துக்கொண்டே வரும்போது, ஏதோ பிசிரடிப்பதை உணர்ந்து விடுவார்கள்.

வெள்ளியம்பலத் தம்பிரான் அவ்வாறு  எழுதிச் சேர்த்த பாடல்கள் கம்பராமாயணத்திலும் உண்டு. தேவாரத்திலும்கூட உண்டு.  இவற்றையெல்லாம் அடையாளம் கண்டு இவற்றைத் தனியாகப் பிரித்தெடுத்திருக்கிறார்கள். பல பதிப்புகளில் ஒரிஜினல் நூலின்
பின்பகுதியில் பிற்சேர்க்கையாக இப்பாடல்களைப் போட்டிருப்பார்கள்.
இந்தப் பாடல்களை "வெள்ளிப் பாடல்கள்"  என்று அழைப்பார்கள்.

வெள்ளியம்பலத் தம்பிரானின் நோக்கம் நல்ல நோக்கம்தான்.
ஆனால் ஒரு புலவரின்  பெயரால் விளங்கும் நூலில் இடைச்செருகல் செய்து, அதே புலவர் எழுதியதாகத் தோன்றச்செய்தது ஒரு வழுதான்.

Thursday 26 May 2011

A VERY RARE BOOK ON KAULI SASTRA


கௌளி சாஸ்திரம் பற்றிய அரிய பழம்நூல்

book kauli sastra


என்னிடம் சில பழைய நூல்கள் இருக்கின்றன. அவற்றில் சில நூல்கள் மிகவும் அறதப் பழசு. தொட்டால்கூட அப்படியே பொலபொலவென்று நொறுங்கக்கூடிய நிலையில் இருக்கின்றன.
சில நூல்கள் மிகவும் அரிய நூல்கள்.
கௌளி சாஸ்திர நூல் ஒன்று இருக்கிறது. சகாதேவர் அருளிச் செய்த கெவுளி சாஸ்திரம்.

ஏன் சகாதேவர்?
பஞ்சபாண்டவர்களில் ஜோதிடத்தில் மிகச் சிறந்த விற்பன்னராக விளங்கியவர் சகாதேவர். அவருடன் கூடப்பிறந்த நகுலன் அசுவ சாஸ்திரத்தில் விற்பன்னர்.
பாரத யுத்தைத் தொடங்குவதற்கு எதிராளியாகிய துரியோதனனுக்கே ஏற்ற நாளும் ஜெயிக்கக்கூடிய லக்கினமும் குறித்துக் கொடுத்தவர் சகாதேவர்.

ஜோதிட சாஸ்திரத்துக்குள் மட்டுமே அறுபத்துநான்கு உட்பிரிவுகள் இருக்கின்றன என்று சொல்வார்கள். ஆரூடம், சரம், சோவி, கௌளி, தும்மல், சகுனம், பட்சி, பல்லி விழுதல், அருள்வாக்கு, உடுக்கு, பம்பை, குடுகுடுப்பை, அஞ்சனம், சொப்பனம், பறவைகளில் கூவல், சாமுத்ரிகா லட்சணம்......
இப்படி இருக்கின்றன. ஏதோ ஞாபகத்துக்கு வந்தவற்றைச் சொன்னேன்.
ஜோதிடத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் சகாதேவர் பாண்டித்தியம் பெற்றவராக இருந்திருப்பார் போலும். அவருடைய பெயரால் பல சோதிட நூல்கள் விளங்குவதைப் பார்த்திருக்கிறேன்.
இந்த கெவுளி சாஸ்திர நூல் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக முற்பட்டு அச்சில் வெளியாகிய நூல்.
ரொம்பவும் நுணுக்கமான பல விஷயங்கள் அடங்கியுள்ளன. எல்லாமே பாடல்களாக இருக்கின்றன.
கெவுளிகளிலேயே ஒவ்வொரு கிழமைக்கு உரிய ஜாதிகள் இருக்கின்றன.

திங்களுக்குச் சொல்லும் ஜாதி -


சங்கரன் அருளினாலே சாற்றுவேன் கெவுளி ஜாதி
பொங்கவே ராஜனாகும் பொருந்தியே ராஜவர்ணம்
தங்கிய முதுகிற் பத்து தழும்புபோல் கீறலுண்டு
இங்கித ஸ்த்ரீயும் தானும் இருப்பரே புசிப்புகொண்டு


செவ்வாய்க்கு -


நண்ணிய ராஜவாசம் நிறத்தினிற் சாம்பல்வர்ணம்
எண்ணிய எட்டுக்கீறல் முதுகினில் இருக்கும் பாரே
வண்மையாய் ஸ்த்ரீயும் தானும் வலமதாய்ப் போஜனங்களுண்டு
புண்ணியர்போலே தட்சணம் பொருந்தியே இருக்கும் பாரே


இப்படியே அத்தனை ஜாதிகளையும் வர்ணிக்கும் பாடல்கள்.
ஒவ்வொரு கிழமைக்கும் எந்தெந்த திக்கிலிருந்து சொன்னால் என்னென்ன பலன் என்று பாடல்கள் சொல்கின்றன.
இந்த மாதிரியிலேயே நாற்பத்திரண்டு பாடல்கள் உண்டு.
பதினாறு திக்கிற்கும் பல்லி சொல்லல் என்னும் இன்னொரு பகுதியும் உண்டு.
அத்துடன் பல்லி விழும் பலனும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆந்தைக்கு என்று ஒரு பகுதியையும் கொடுத்திருக்கிறார்கள்.
ஆந்தை அலறலால் எல்லாமே கெடுதல்தான் என்று நம்புவார்கள். ஆனால் அதனால் நன்மையுமுண்டு.....

சிந்தையது களித்திடுவாய் ரெண்டே சீறல்
சீக்கிரமே நினைத்த பொருள் வந்துகூடும்
விந்தையுடன் சீறல்தான் மூன்றேயாகில்
வஞ்சியரை எப்படியும் புணர்வாயப்பா....

நல்லதும் நிறைய இருக்கிறது.
ஆந்தையென்றால் ஒருவகைப் பயமும் திகிலும் இருக்கும். ஆனால் ஆந்தை அலறலாலும் நன்மையுண்டு.
அருமையான அரிய நூல்.


$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Sunday 22 May 2011