வெள்ளிப் பாடல்கள்
வெள்ளியம்பலத் தம்பிரான் என்று ஒருவர் இருந்தார். அவர் ஒரு பெரிய தமிழறிஞர். பல நூல்களை ஆய்வு செய்து, உரைகளை இயற்றி, பாடம் சொன்னவர்.
பல பண்டைய நூல்களைப் படித்துப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கு ஓர் உணர்வு ஏற்படும். நூலின் சில இடங்களில் அந்த குறிப்பிட்ட இலக்கியநூலின் கர்த்தா விளக்கமாக சொல்லியிருக்கமாட்டார். அல்லது பொருள் மயக்கம் ஏற்படும். அல்லது ஏதோ குறைவது போலவும் , சுருக்கமாக இருப்பது போலவும் தோன்றும்.
சிலநூல்களில் சில இடங்களில் அவ்வாறு குறைவு இருப்பதுபோல் தம்பிரானுக்குத் தோன்றினால், அந்தந்த இடங்களில் , அந்த நூல் பாடிய புலவரின் நடையில் அவராகவே அதிகப் பாடல்களைப் பாடி, இடைச்செருகலாகச் சேர்த்துவிடுவார்.
அந்தப் பாடல்களையும் சேர்த்துப் படிக்கும்போது சுருக்கம் நீங்கி, விரிவும் விளக்கமும் ஏற்படும்.
ஆனால் பல சமயங்களில் தம்பிரானின் சொந்தக்கருத்துக்கள் அந்த இடத்தில் வந்து விழுந்துவிடும். ஒரிஜினல் புலவரின் நடையில் வேறொருவர் பாட முயற்சி செய்த பாடல் என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தும் பாடல்களும் இருக்கும். சில பாடல்கள் அப்பட்டமாகத்
தங்களைக் காட்டிக் கொடுத்துவிடும்.
ஆழ்ந்த நூல் புலமை உடையவர்கள், படித்துக்கொண்டே வரும்போது, ஏதோ பிசிரடிப்பதை உணர்ந்து விடுவார்கள்.
வெள்ளியம்பலத் தம்பிரான் அவ்வாறு எழுதிச் சேர்த்த பாடல்கள் கம்பராமாயணத்திலும் உண்டு. தேவாரத்திலும்கூட உண்டு. இவற்றையெல்லாம் அடையாளம் கண்டு இவற்றைத் தனியாகப் பிரித்தெடுத்திருக்கிறார்கள். பல பதிப்புகளில் ஒரிஜினல் நூலின்
பின்பகுதியில் பிற்சேர்க்கையாக இப்பாடல்களைப் போட்டிருப்பார்கள்.
இந்தப் பாடல்களை "வெள்ளிப் பாடல்கள்" என்று அழைப்பார்கள்.
வெள்ளியம்பலத் தம்பிரானின் நோக்கம் நல்ல நோக்கம்தான்.
ஆனால் ஒரு புலவரின் பெயரால் விளங்கும் நூலில் இடைச்செருகல் செய்து, அதே புலவர் எழுதியதாகத் தோன்றச்செய்தது ஒரு வழுதான்.