Friday, 10 June 2011

புராதனக் கடாரத்துக் கல்வெட்டு



புராதனக் கடாரத்துக் கல்வெட்டு

தென்கிழக்காசியாவிலேயே மிகப் புராதனமான கல்வெட்டு ஒன்று மலேசியாவின் பினங்கு மாநிலத்தில் செரோக் தோக்குன் என்னுமிடத்தில் காணப்படுகிறது. 
அதைப் பற்றிய விபரங்களை இங்கே காணலாம்

தமிழில் இங்கேயும் -



ஆங்கிலத்தில் இங்கேயும் - 


எழுதியிருக்கிறேன்.

ஒரு பிரபலமான குறும்பட/செய்திப்படத் தயாரிப்பாளரான முரளி கிருஷ்ணன்,கோலாலும்ப்பூரிலிருந்து சில மாதங்களுக்கு முன்னர் சுங்கைப் பட்டாணிக்கு வந்து என்னைச் சந்தித்தார்.  இரண்டு நாட்கள் இங்கு இருந்தார்.
பல விஷயங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
அவரிடம் இந்தக் கல்வெட்டைப் பற்றியும்  கூறினேன். 
உடனேயே அதைப் பார்க்கவேண்டும் என்று விரும்பினார். சுங்கைப்பட்டாணியிலிருந்து ஒரு நடை வேகமாகச் சென்றுவிட்டு திரும்பலாம் என்று எண்ணினார்.
நான் அந்தக் கல்வெட்டு இருக்கும் இடத்துக்குச் சென்று பத்தாண்டுகளுக்குமேல் ஆகின்றன. 
சில உடல்நிலைப் பிரச்னைகளால் சில மாதங்களாக எங்குமே செல்வதில்லை. 
அதுவும் சமீபத்தில் இடது முழங்கால் வலியால் நடப்பது, உட்கார்ந்து எழுந்திருப்பது போன்ற அவசிய காரியங்கள்கூட சிரமமாக உள்ளன. 
திடீரென்று எனக்குள் ஓர் உறுத்தல். 
"வலி ஒரு பக்கம் இருக்கட்டும். நீண்ட நாட்களாகப் போகவும் இல்லை. இப்போது போய்ப் பார்ப்போமே", என்ற எண்ணம். 
அவருடன் சென்று, காருக்குள்ளேயே இருந்துகொண்டு பார்க்கலாமே என்ற நோக்கம். 
நானும் வருகிறேன் என்றதும் அவருக்கு ஒரே குதூகலம். ஆச்சரியம், அதிர்ச்சி. 
"டாக்டர், உங்களைப் பார்ப்பதே மிகவும் சிரமம் என்றார்கள். நீங்களே என்னுடன் வந்தீர்கள் என்று சொன்னால் நம்பவே மாட்டார்கள். அதுவும் இந்த நிலையில்!", என்று சொன்னார். 
அந்தக் கல்வெட்டு இருக்கும் இடத்துக்குப் போகும் பாதை மறந்துவிட்டது. மேலும் இப்போதெல்லாம் ஏராளமான வீடமைப்புத் திட்டங்கள் போன்றவற்றால் ஊர்களிலும் பாதைகளிலும் பெரும் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. 
இன்னொரு அன்பருக்கு டெலி·போன் செய்து பாதையைக் கேட்டவண்ணம் அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். 
அந்தப் பாறை இருக்கும் இடம் மட்டும் ஒரு சிறிய வெளியாக இருந்தது. அது இருக்கும் இடத்தைக்கூட கண்டுபிடிக்கமுடியவில்லை. 
அந்த இடத்தைச் சுற்றிலும் சந்தனமாதா கோயிலைச் சேர்ந்த அழகிய கட்டடங்கள் ஓங்கி நின்றன. 
எப்படியோ கல்வெட்டு இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டோம். 
ஒரு திறந்த கூடத்துக்குள் இப்போது அது இருக்கிறது. முன்பும் அப்படித்தான். ஆனால் புதிய கூடம் மிகச் சிறியதாக இருந்தது. பயன்படுத்தாத ஓடுகளை அங்கு அடுக்கி வைத்திருந்தார்கள். குப்பை, தூசி, மண் என்று மோசமான சூழல்.  
அதைப் பார்த்தபோது மனத்தில் ஒரு பெரும் அடி விழுந்தது. 
யாராரோ அந்தக் கல்வெட்டின் மீதும், அதைச் சுற்றிலும் Graffitti என்னும் விதத்தில் அவரவர் பெயர்களைச் செதுக்கி வைத்திருந்தார்கள். 
கல்வெட்டு பல இடங்களில் உடைந்து பெயர்ந்து போயிருந்தது. சில இடங்களில் சிமெண்ட் பூசியிருந்தார்கள்.
அவரை அந்தக் கல்வெட்டு இருந்த பாறையின் மீது ஏறச்செய்து அந்தக் கல்வெட்டின்மீது தண்ணீரை ஊற்றச் செய்தேன். 
அவ்வாறு செய்தால் கல்வெட்டு எழுத்துக்கள் புலப்படும்.
அதையெல்லாம் வீடியோப் படம் எடுத்துக்கொண்டார்.

        அதன் பிறகு நானே ஏதோ ஒரு தைரியத்தில் அந்தப் பாறையின்மீது ஏறினேன். எந்தெந்தப் பக்கத்தில் வழுக்கும்; எந்தப் பக்கத்தில் கால் ஊன்ற முடியும் என்பதெல்லாம் எனக்கு அத்துப்படி. எப்படி எந்தக் கோணத்தில் அமர்ந்துகொள்ளவேண்டும்; எந்தப் பக்கத்திலிருந்து கீழே  இறங்கவேண்டும் என்ற கணிப்பும் நல்லவேளையாகச் சரியாக இருந்துவிட்டது. ரொம்பவும் பாலன்ஸ் பண்ணித்தான் பாறையில் திரும்புவது, அமர்வது எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தேன்.  என் வயதுக்கும், உடல் வாகுவுக்கும் உடல் நிலைக்கும் இது ஒரு பெரிய சாதனைதான். அதுவும் மூச்சைப் பிடித்துக்கொண்டு, பாறையின் மேலும் பாறைச்சுற்றி வந்தும் பல விஷயங்களை ரிக்கார்டிங்குக்காகப் பேசவேண்டியதாயிற்று.  இது அதைவிடப் பெரிய சாதனை.
மாதாக் கோயிலின் அருகே இன்னும் ஓர் இடத்தையும் படம் எடுத்துக்கொண்டார். 
வேறு சில அபூர்வமான தடையங்கள் அங்கு இருந்தன. 
இப்போது அவற்றைக் காணோம்
மாதாவின் Grotto ஒன்றை அங்கு மூன்றுவாரங்களுக்கு முன்னர் நிறுவி மங்களாசாசனம் செய்திருந்தார்கள். 
தடையங்களைத் தேடிக்கொண்டே சென்ற கார் நேரே அந்த க்ரோட்டோவுக்குத்தான் சென்று நின்றது. அதற்குமேல் போவதற்குப் பாதை கிடையாது.
காளிதாசனுடைய சியாமளா தண்டகத்தின் ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறான் அல்லவா?
'ஜகத் ஏக மாதா'
'உலகங்கள் அனைத்துக்கும் உரிய ஒரே தாய்'.
'அவள் வேறு, இவள் வேறு' என்ற பேச்சுக்கே இடமில்லாமல் காளிதாசன் செய்துவிட்டான்.
திரும்பி வந்துவிட்டோம். 

இத்தனை சிரமங்களுடன் நான் அங்கு சென்றதற்கு அர்த்தமும் பயனும் இருக்கிறது. 
இந்தக் கல்வெட்டு இப்போது இத்தனை சிதிலமாக இருக்கிறது. 
நாளடைவில் இன்னும் சிதிலமாக ஆகும். 
மேலும் அது அப்படி ஆகாதவண்ணம் தடுப்பதற்கு உரிய முயற்சிகளைச் செய்யலாமல்லவா?

நான் தான் அதையும் செய்யவேண்டும். 
வேறு யார் செய்யப்போகிறார்கள்?
        இந்தக் காட்சிகளை YouTube-இல் காணலாம்.  

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment