Saturday 11 June 2011

ROSETTA STONE

கண்ணெழுத்துக்குச் சாவி - ரோஸெட்டாக் கல்



பழங்கால எகிப்தில் வழங்கிய மொழிக்குறியீடுகளை ஹையரோக்லி·பிக்ஸ் என்று அழைக்கிறார்கள். 
தமிழில் மிக மிகப் பழங்காலத்தில் வழங்கியதாகக் கூறப்படும் எழுத்துக்களில் கண்ணெழுத்துக்கள், கோலெழுத்துக்கள், வட்டெழுத்துக்கள், கூட்ட்ழுத்துக்கள், பட எழுத்துக்கள் போன்றவை இருந்ததாகச் சொல்வார்கள்.
இவற்றில் ஏதோ ஒரு வகையாக ஹையரோக்லி·பிக்ஸ் இருந்திருக்கலாம். இந்தத் துறையில் தமிழர்கள் இன்னும் ஆராய்ச்சிகள் செய்ய ஆரம்பிக்கவில்லை.




இதுவரைக்கும் உலகில் வழங்கிய பல மொழிகள் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்கள், குறியீடுகள் கணடறியப்பட முடியவில்லை. ஹராப்பா மொழி, அதன் சமகாலத்து க்ரேட்டானிய மொழி, இத்தாலியில் ரோமர்கள் காலத்துக்கும் முற்பட்டு வழங்கப்பட்ட எட்ருஸ்கன் மொழி போன்றவை படித்தறியாத முடியாத நிலையில் இருக்கின்றன. 
இவற்றிற்கெல்லாம் இன்னும் முதுமையான எகிப்திய எழுத்துக்களை மட்டும் படிக்க முடிகிறதே?
அதற்குக் காரணம் ஒரு கல்.
அதனை ரோஸெட்டா கல் என்று அழைக்கிறார்கள்.




அலெக்ஸாண்டிரியா நகருக்கு மிக அண்மையில் உள்ள ரொஸெட்டா என்னும் ஊருக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டதால் அப்பெயர்.
அது அப்படியொன்றும் பெரிய கல் அல்ல. மூன்றே முக்கால் அடி நீளமும் இரண்டே கால் அடி அகலமும் உள்ள சிறிய கல்தான். 
அந்தக் கல்லில் காணப்பட்ட எழுத்துக்களால்தான் அதற்கு அவ்வளவு சிறப்பு. 
மூன்று வகையான எழுத்துக்களில் அந்தக் கல்வெட்டு காணப்பட்டது. 
எகிப்திய பட எழுத்துக்கள், டெமோட்டிக் மொழி, கிரேக்கம் ஆகியவை.

ஹிட்லர் நினைத்ததுமாதிரியே ஒரு காலத்தில் ·பிரான்ஸின் நெப்போலியனும் நினைத்தார். மத்திய கிழக்கைப் பிடித்துவிட்டு, அப்படியே பாரசீகத்தையும் இந்தியாவைக் கைப்பற்றவேண்டும் என்ற எண்ணம். 
ஆனால் நெப்போலியன் எகிப்திலும் ஸீரியாவிலும் மாட்டிக்கொண்டார். 
அவர் எகிப்தில் இருக்கும்போது, அவருடைய படையைச் சேர்ந்த எஞ்சினியர்களில் சிலர், நல்ல ஆய்வு மனப்பான்மை படைத்தவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் நெப்போலியனுடைய வளர்ப்பு மகனாகிய ஷாம்ப்போலியோங் என்னும் பேரறிஞனும் சென்றிருந்தான். 
ஸ்·பிங்க்ஸ் என்னும் நரசிம்மத்தின் சிலையை அனைவரும் அறிவோம் அல்லவா? 
நெப்போலியனுடைய போர்வீரர்களில் சிலர், தங்களுடைய பீரங்கிச்சூட்டின் குறியை சோதித்துப் பார்ப்பதற்காக ஸ்·பிங்க்ஸின் மூக்கைக் குறிபார்த்துச் சுட்டார்கள். 
அவர்களின் குறி தப்பவில்லை. 
ஸ்·பிங்க்ஸின் மூக்குப்போயிற்று. 


நெப்போலியனால் ஏற்பட்ட பல நன்மைகளில் முக்கியமானவை எகிப்திய ஆராய்ச்சியில் நிகழ்ந்த நலமிக்க திருப்புமுனைகள். 
பூஷார்ட் என்னும் எஞ்சினியர்தான் ரோஸெட்டாவில் அந்தக் கல்வெட்டைக் கண்டுபிடித்தார். அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பூஷார்ட் அதனை ·பிரான்ஸ¤க்கு அனுப்பிவைத்தார்.
எகிப்திய பட எழுத்துக்கள் நீண்ட காலமாக வழக்கில் இருந்தன. எகிப்திய ·பேரோ மன்னர்களின் பல பரம்பரைகள் ஆண்டு ஓய்ந்த பின்னர், அலெக்ஸாண்டர் அவர்களிடமிருந்து எகிப்தைக் கைப்பற்றினார். அவர் மாஸிடோனியாவிலிருந்து துருக்கி, மத்திய கிழக்கு, பாரசீகம், மத்திய ஆசியா, ஆ·ப்கானிஸ்தானம், பஞ்சாப் ஆகிய நாடுகள் கொண்ட பேரரசை வைத்திருந்தார். ஆனால் முப்பதிரண்டு வயதிலேயே அவர் இறந்துபோனதாலும் அவருக்குப் பிள்ளைகள் இல்லாததாலும் அவருடைய படைத்தலைவர்கள் நால்வர் அந்த பேரரசைத் தங்களுக்குள் பிரித்துக்கொண்டனர். 
அவ்வாறு பிரிக்கப்பட்டதில் டாலமி என்னும் படைத்தலைவரின் பங்காக எகிப்து கிடைத்தது. அவரிலிருந்து தோன்றிய டாலமி என்னும் கிரேக்க மன்னர் வம்சம் எகிப்தை ஆண்டது. அவர்களின் ஆட்சியில் கிரேக்க மொழியும் கிரேக்க கலாசாரமும் எகிப்தில் பரவின. அவற்றுடன் பண்டைய எகிப்திய மொழியும் எழுத்துக்களும் வழங்கின. அந்தப் பரம்பரையின் கடைசி அரசிதான் க்லியோபாட்ரா.  அவளிடமிருந்து ரோமர்கள் எகிப்தைக் கைப்பற்றி தங்களின் நேரடி ஆட்சியில் வைத்துகொண்டனர்.
அவர்கள் காலத்தில் ரோமர்களின் மொழியாகிய லத்தீன், ஆட்சி மொழியாகியது.
கிரேக்கர்களின் காலத்தில் கிரேக்கத்துடன் வழங்கிய எகிப்திய லிபி, ரோமர்களின் காலத்தில் வழக்கிழந்தது. 
ஒரே ஒரு நூற்றாண்டுக் காலத்தில் எகிப்தியம் அறவே மறக்கப்பட்டது. அதன் பின் வாழ்ந்த ரோமர்களுக்கு அது ஒரு மொழி என்பதுகூட தெரியாமலேயே போய்விட்டது.
1801-ஆம் ஆண்டில் சில்வெஸ்டர் சேஸி என்னும் ஆராய்ச்சியாளர் ரோஸெட்டாக் கல்வெட்டின் டெமோட்டிக் எழுத்துக்களில் காணப்பட்ட பெயர்களான அலெக்ஸாண்டர், டாலமி, என்னும் சொற்களைக் கண்டுபிடித்தார். 
அடுத்து, தாமஸ் யங்க் என்னும் பிரிட்டிஷ் பௌதிக விஞ்ஜானியும், ஷாம்ப்போலியோங் ஆகிய இருவரும் எகிப்திய பட எழுத்துக்களை மொழி மாற்றம் செய்து வெற்றி கண்டனர். மூன்று மொழிகளிலும் உள்ள எழுத்துக்களை ஒப்பீடு செய்து அவற்றுக்குரிய ஒலியன்களைக் கண்டறிந்தனர்.
அப்போதுதான் அவை வெறும் படக்குறியீடுகள் இல்லை என்பதுவும் அதுவும் ஒரு மாத்ருகா நெடுங்கணக்குப் போன்றதைக் கொண்ட லிபி என்பதையும் அவர்கள் நிறுவினார்கள். 
இதற்கான  ஆய்வுகளை மேற்கொண்டுசெய்யும்போது ஒரு கல் தூணில் 'க்லியோப்பாட்ரா' என்னும் பெயரை கிரேக்கம், எகிப்தியம் ஆகிய இரு லிபிகளிலும் கண்டனர். அதன்மூலமும் அந்த லிபியின் குறியீடுகளுக்கு உரிய ஒலியன்களைக் கண்டறிந்துகொண்டனர்.
யங்கின் ஆய்வுகளையும் சேர்த்துக்கொண்டு, ஷாம்ப்போலியோங் இருபத்தாறு எழுத்துக்களைக்கொண்ட ஒரு எகிப்திய நெடுங்கணக்கைச் சேகரித்தார். 
கெனோப்பஸ் ஆணை என்னும் இன்னொரு கல்வெட்டின் மூலம் இந்த எழுத்துக்களின் ஒலியன்களை நன்கு உறுதிப்படுத்திக் கொண்டனர். கெனோப்பஸ் ஆணைக் கல்வெட்டிலும் மூன்று மொழிகளின் லிபியில் ஒரே செய்தி முழுமையாக எழுதப்பட்டிருந்தது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

1 comment:

  1. மிகவும் ஸ்வாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் அமைந்த கட்டுரை! தங்கள் நற்பணி தொடரட்டும்!

    முத்துசுப்ரமண்யம், Atlanta.

    ReplyDelete