Thursday 9 June 2011

STRANGE SYMBOL OF MERLION

சிங்கப்பூரின் சிம்ம மகரம்
(MERLION)


        சில காலத்துக்கு முன்னர் கோலாலும்ப்பூர் பத்துமலை யாளியைப் பற்றி பெருமாள் கேட்கவும் இது நினைவுக்கு வந்தது.


சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூர் சென்று வந்த தமிழகக்காரர் ஒருவரைக் கோலாலும்ப்பூரில் சந்தித்தேன். அவர் ஒரு கேள்வியைக் கேட்டார்:
"சிங்கப்பூரில் ஓரிடத்தில் ஒரு பெரிய சிலை இருக்கிறதே. அது சிங்கம் போல் இருக்கிறது. ஆனால் உடம்பு வேறுமாதிரி இருக்கிறதே?"


நான் சொன்னேன்:
"நீங்கள் ரொம்ப ஆப்ஸர்வண்ட்டாக உள்ள ஆள் போல. ஏனெனில் இந்த சிலையை சிங்கப்பூர்க்காரர்கள்கூட சரியாகக் கவனித்திருக்கமாட்டார்கள். அவர்கள் மிகவும் பரபரப்பானவர்கள். அவர்களின் இயல்பு அது. அவ்வளவு பரபரப்பு.






ராஜேந்திர சோழருடைய கொள்ளுப் பேரனாகிய நீல உத்தமனுடைய சின்னம் அது. 
தலை சிங்கத் தலை. உடல் மகர மீனின் உடல். 
ஆங்கிலத்தில் இதை Merlion என்பார்கள். Mermaid என்ற சொல்லைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா? இடுப்புக்குமேல் அழகிய பெண்னின் உருவம். இடுப்புக்குக் 
கீழே மீனின் உடல். இதிலேயே ஆண் வர்க்கத்தை Mermen என்பார்கள். 
சிங்கப்பூரின் ஆற்றின் முகத்துவாரத்தில் கடல் ஆழமில்லாமல் இருக்கும். அந்த இடத்தில் ஒருவகையான கடற்கோரை மிகுதியாக வளர்ந்திருந்தது. அதை மேய்வதற்காக Dugong எனப்படும் கடற்பசு ஏராளமாக அங்கு வரும். கடற்பசு நெட்டுக்குத்தலாக நிலை நீச்சில் நின்றுகொண்டு தன்னுடைய கன்றுக்கு மனிதர்களைப் போலவே மார்போடு அணைத்துக்கொண்டு பால் கொடுக்கும். தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு மனிதப்பெண் தன் குழந்தைக்குப் பால் கொடுப்பதுபோல் தோன்றும். அதிலிருந்து கடற்கன்னி Legend தோன்றியிருக்கலாம் என்று கருதுவார்கள்.
ஆனால் சிங்கப்பூரில் உள்ள சிங்கச்சிலைக்குக் கடற்கன்னி சம்பந்தம் ஏதும் இல்லை. 
நீல உத்தமர் துமாஸிக் என்னும் அந்தத் தீவின் கடற்கரையில் ஒரு சிங்கத்தைப் பார்த்ததாகவும் அந்த இடத்திலேயே ஒரு துறைமுகப் பட்டினத்தை உருவாக்கியதாகவும் மலேசிய வரலாறு சொல்லும். அவர் உண்மையிலேயே பார்த்தது இப்போது உலகில் இல்லாத, பிடரி மயிர் அடர்ந்த, சப்பை முகம் கொண்ட Sea Lion போன்ற ஏதாவது பிராணியைக் கண்டிருக்கலாம். அல்லது டுகாங்கிலேயே ஏதாவது சிங்கத் தோற்றம்கொண்ட அபூர்வ Mutant ஏதாவதைப் பார்த்திருக்கலாம்.
இன்னும் விரிவாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். ஏனென்றால் அங்கிருந்து பேச்சு இயல்பாகவே வரலாற்றுக்குத்தானே செல்லும்? அப்படித்தான் சென்றது. வரலாறு என்றாலேயே, பேசுபவர் பேசினால் விரிவாகத்தானே செல்லும்? அப்படித்தான் சென்றது
"விரிவஞ்சி இங்ஙனே விடுத்தனம்" என்று அந்தக் காலத்துத் தமிழ்ப் புலவர்கள் சொல்வார்கள். அதுபோல அவரிடம் சொன்னதையெல்லாம் இங்கே சொல்லவில்லை.
பாலகுமாரன் எழுதப்போகும் கதையில் இதெல்லாம் வரவேண்டுமே? இல்லையென்றால் பூர்த்தியானதாக இராதே? 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

No comments:

Post a Comment