Sunday 12 June 2011

BIRTH OF 'THE TAMILS 1800 YEARS AGO'

'ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்'  
நூலின் பிறப்பு


நூறாண்டுகளுக்கு முன்னர் கனகசபைப் பிள்ளை என்றொருவர் இருந்தார். 
அந்தக் காலத்திலேயே சென்னையில் அவர் மேற்படிப்புப் படித்தவர். பி.ஏ. பட்டத்துடன் சட்டத்திலும் பட்டம் பெற்றார். 
அவர் எடுத்துக்கொண்ட முதற் கேஸ் மிகவும் சிக்கலானது, வெல்லமுடியாத கேஸ் என்று மற்றவர்களால் முடிவு செய்யப்பட்ட கேஸ். எதிரணியினர் பக்கம் வலுவான சான்றுகள் 
இருந்திருக்கும் போலும். அவர்கள் பக்கம் நியாயமும் இருந்திருக்க வேண்டும். 

இருப்பினும் கனகசபைப் பிள்ளை தம்முடைய அந்த முதல் கேஸை மிகவும் லாகவமாகக் கையாண்டு தம்முடைய திறமையால் தம் கட்சிக்காரரை வெல்லவைத்தார். 
கோர்ட்டில் இருந்த மட்டுக்கும் அவர் பெருமையினால் பூரித்துப்போயிருந்தார். ஏனெனில் வெல்ல முடியாத கேஸை வென்று காட்டியது ஒரு பெரும் சாதனையல்லவா? 
அதுவும் முதல் கேஸ்!.
கோர்ட்டில் இருந்த வக்கீல்கள் முதல் பலரும் பாராட்டினார்கள். அந்தக் கேஸைப் பார்க்க வந்த கனகசபைப் பிள்ளையின் பழைய வகுப்புத் தோழர்களும் உறவினர்களும் நண்பர்களும் 
உள்ளன்போடு பாராட்டினர்.

கனகசபைப் பிள்ளை பாராட்டுக்களைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு கோர்ட்டை 
விட்டு வெளியில் வந்தார்.

வீடு திரும்புவதற்காக வண்டியில் ஏறப்போனார். 
அப்போது பெரிய ஓலமும் கூக்குரலும் கேட்டது. 
தோற்றுப் போன கட்சிக்காரர்கள் ஓடிவந்து அவரைப் பார்த்து அழுதுகொண்டு, திட்டி 
சாபம் கொடுத்தனர். 

அத்துடன் இல்லை.
மண்ணை வாறித் தூற்றினர்.
அவ்வளவுதான். 
மனது ஒடிந்து போன கனகசபைப் பிள்ளை மீண்டும் கோர்ட் பக்கம் போகவேயில்லை. 
அதுதான் முதல் கேஸ¤ம் கடைசிக் கேஸ¤மாக முடிந்தது. 
தம் தொழிலின்மீதே ஆழ்ந்த வெறுப்புக்கொண்ட பிள்ளையவர்கள் மனச்சாந்திக்காக இன்னொரு பக்கம் திரும்பினர். 
தமிழ்.
பழந்தமிழ்.
பழந்தமிழ் இலக்கியம். 
அப்போதுதான் சங்க இலக்கியங்களும் மற்ற பழந்தமிழ் இலக்கியங்களும் தமிழ்த்தாத்தா  உவேசாமிநாத அய்யரவர்கள், தாமோதரம் பிள்ளையவர்கள் போன்றோரால் உலகத்திற்கு 
வெளிக் கொணரப்பட்டிருந்தன. 

    பாலவநத்தம் பாண்டித்துரைத்தேவர், ராம்நாதபுரம் சேதுபதி மன்னர், ஊற்றுமலை ஜமீன்தார், காசிமடாதிபதி, திருவாவடு துறை மடாதிபதி போன்றோர்
அத்தகைய ஆராய்ச்சிகளுக்குப் பெரிதும் உதவி வந்தனர்.

அந்த இலக்கியங்களில் மூழ்கியதோடு அல்லாமல் மிக ஆழமாக ஆராய்ச்சிகளையும் செய்தார். 
சங்க இலக்கியங்களின் மூலம் ரோம-கிரேக்க நாகரிகங்களுக்கு ஈடாக உள்ள உன்னத நாகரிகம் ஒன்று பண்டைத் தமிழர்களிடையேயும் இருந்தது என்பதை உணர்ந்தார். 
கூலிக்காரத் தமிழர்கள், படிப்பறிவில்லாத தமிழர்கள் என்று ஆங்கிலேயர்களாலும் மற்றவர்களாலும் இளக்காரமாக நினைக்கப் பட்டிருந்த தமிழர்கள் தங்களைப் பற்றி தாங்களே ஒரு தாழ்மை மனப்பான்மையைக் கொண்டிருந்தனர். அறுநூறாண்டுகளாக அடிமைச் சிறுமதியை உச்சத்தில் கொண்டு உழன்றுகொண்டிருந்தார்கள் 
அப்படிப்பட்ட தமிழர்களுக்கும் ஒரு பொற்காலம் இருந்தது என்பதை உலகத்தினருக்கு உணர்த்த விரும்பினார்.
அத்துடன் தமிழர்களுக்கும் தங்களைப் பற்றிய சுயமரியாதை ஏற்படட்டும் என்றும் 
விரும்பினார்.

ஆகவே ஒரு மிகச் சிறந்த நூலை உருவாக்கினார்.
ஆங்கிலத்தில்.
அப்படிப் பிறந்ததுதான்.......

'The Tamils 1800 Years Ago'.

அன்புடன்

ஜெயபாரதி

=============================



2 comments:

  1. நன்றி, இந்நூலைப் படிக்கவிரும்புகிறவர்கள். கீழ்வரும் linkல் படிக்கலாம்.

    http://books.google.com/books?id=VuvshP5_hg8C&pg=PA1&source=gbs_toc_r&cad=4#v=onepage&q&f=false

    ReplyDelete
  2. :-)
    ரொம்பவும் மகிழ்ச்சி. இன்னும் பல நூல்களையும் பாடல்களையும் தமிழ் அறிஞர்களையும் முற்பட வைத்து, அறிமுகமும் அங்கீகாரமும் பெறச் செய்யவேண்டியுள்ளது.

    ReplyDelete